கமெனியை முடிக்கும் திட்டத்தில் மொசாட் தோற்ற கதை | israel vs iran | khamenei | idf vs irgc | mossad
ஈரானுக்கு எதிராக 13ம் தேதி போரை துவங்கிய இஸ்ரேல், ஈரானின் அணு சக்தி மையங்கள், ராணுவ கட்டமைப்புகளை குறி வைத்து குண்டு வீசியது. முதல் நாள் தாக்குதலில் அணு விஞ்ஞானிகள், ராணுவத்தின் பிரதான தளபதி உட்பட பல முக்கிய தளபதிகளை கொன்று குவித்தது. முக்கிய புள்ளிகளை குறி வைத்து கொன்ற இஸ்ரேலின் ‛டார்கெட் கில்லிங் முறை ஈரானை மிரள வைத்தது. ஈரானின் உச்ச தலைவர் கமெனியையும் இஸ்ரேல் குண்டுகள் குறி வைக்க கூடும் என்ற அச்சம் தொற்றியது. 13ம் தேதியே அவசர அவசரமாக ரகசிய இடத்துக்கு கமெனியும் அவரது குடும்பத்தினரும் மாற்றப்பட்டனர். 12 நாட்கள் நடந்த போரில் ஈரானின் அணு சக்தி கட்டமைப்புகளை பெரிய அளவில் இஸ்ரேல் போர் விமானங்கள் சிதைத்தன. ராணுவ கட்டமைப்புகள், விமான படை தளங்களையும் குண்டு வீசி நொறுக்கின. டார்கெட் கில்லிங் முறையில் தளபதிகளை வேட்டையாடும் சம்பவத்தையும் இஸ்ரேல் அரங்கேற்றியது. ஒரு வழியாக 12 நாட்களுக்கு பிறகு அமெரிக்கா, கத்தார் நாடுகள் முயற்சியால் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகும் 2 நாட்களாக உச்ச தலைவர் கமெனியை காணவில்லை. போர் நிறுத்த அறிவிப்பை கூட அவர் வெளியிடவில்லை. மற்ற அரசு மற்றும் ராணுவ அதிகாரிகள் தான் வெளியிட்டனர். இதனால் அவர் உயிருடன் தான் இருக்கிறாரா என்ற சந்தேகம் ஈரான் மக்களுக்கே வந்து விட்டது. கமெனி குறித்து மக்கள் பகிரங்கமாக கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். இந்த நிலையில் நேற்று முதல் முறையாக உச்ச தலைவர் கமெனி வெளியே தலை காட்டினார். அமெரிக்கா, இஸ்ரேலை மிரட்டும் விதமாக பரபரப்பு வீடியோவும், அறிக்கையும் வெளியிட்டார். கமெனியை பார்த்த பிறகு தான் ஈரான் மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் தான் இஸ்ரேல் அதிர்ச்சி குண்டை வீசி உள்ளது. 12 நாட்கள் போர் நடக்கும் போதே முக்கிய தளபதிகளை குறி வைத்தது போல் கமெனியையும் இஸ்ரேல் குறி வைக்கும் என்று பல புலனாய்வு ஊடகங்கள் கூறி வந்தன. ஆனால் இஸ்ரேல் இதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும் அவரை கொன்றால் நல்லது தான். போர் நிரந்தரமாக முடிந்து விடும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சொல்லி இருந்தார். இந்த நிலையில் தான் இஸ்ரேலின் ராணுவமும், உளவு அமைப்பான மொசாட்டும் கமெனியை கொலை செய்ய பயங்கர திட்டம் தீட்டியதும், ஆனால் அதில் இருந்து கமெனி சாதூரியமாக தப்பி இருப்பதும் இப்போது தெரியவந்துள்ளது. அதாவது போர் துவங்கியதுமே கமெனி ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். குறிப்பாக, வடகிழக்கு ஈரானில் உள்ள ஒரு நகரத்துக்கு பக்கத்தில் மிகவும் ஆழமான பாதாள அறையில் பதுங்கி இருந்ததாக தகவல் வெளியானது. அவரிடம் எந்த தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லை. ஏதாவது சாதனம் வைத்திருந்தால் அதை வைத்து இஸ்ரேல் உளவுத்துறை மோப்பம் பிடித்து விடும் என்று ஈரான் அரசு அச்சப்பட்டது. வெளியுலக தொடர்பே இல்லாமல் தான் பதுங்கு குழியில் கமெனி இருந்தார். போர் நடக்கும் போதே அவரை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று இஸ்ரேல் முழு முயற்சியில் இறங்கி இருக்கிறது. இதற்காக இஸ்ரேல் ராணுவமும், மொசாட்டும் பயங்கர திட்டம் வைத்திருந்தது. ஆனால் மொசாட் உளவு அமைப்பால் கமெனி எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. பல விதமான ஏஜென்ட்களை வைத்து ஈரானில் ரகசியமாக உளவு பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. கமெனி பதுங்கிடம் மிகவும் ரகசியமாக இருந்தது. இதனால் அவரை இஸ்ரேலால் கொலை செய்ய முடியாமல் போய்விட்டது. இதை இப்போது இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் போட்டு உடைத்து இருக்கிறார். ‛கமெனி எங்கள் பார்வையில் சிக்கவில்லை. எங்கள் கண்ணில் பட்டிருந்தால் நிச்சயம் அவரை முடித்து இருப்போம். இதை கமெனி நன்கு தெரிந்து வைத்திருந்தார். எனவே தான் மிகவும் ஆழமான பதுங்கு குழியில் சென்று தஞ்சம் அடைந்து விட்டார். முக்கிய தளபதிகள், ராணுவத்துடன் இருந்த எல்லா தொடர்பையும் துண்டித்து விட்டார். எனவே தான் அவர் இருக்கும் இடத்தை மோப்பம் பிடிக்க முடியாமல் போய் விட்டது என்று இஸ்ரேல் காட்ஸ் சொன்னார். கமெனியை கொலை செய்யும் திட்டத்துக்கு அமெரிக்காவிடம் இஸ்ரேல் அனுமதி வாங்கியதா என்று அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த காட்ஸ், கமெனியை கொலை செய்ய நாங்கள் யாரிடமும் அனுமதி பெற தேவை இல்லை. அவரை பல இடங்களில் தேடினோம். ஆனால் அவர் சிக்காமல் போய் விட்டார் என்றார்.