புதுச்சேரி வந்த துணை ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை | Jagdeep Dhankhar | Vice president of india |
துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மூன்று நாள் அரசுமுறை பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார். கடற்கரை சாலையில் உள்ள நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள அவர், இன்று மாலை ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மாணவர்களுடனும், நாளை புதுச்சேரி மத்திய பல்கலை மாணவர்களுடனும் கலந்துரையாடுகிறார். இதற்கிடையே கவர்னர் கைலாஷ்நாதன், புதுவை வந்துள்ள துணை ஜனாதிபதிக்கு கவர்னர் மாளிகையில் நேற்று இரவு விருந்து அளித்தார். இதில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது முதல்வர் ரங்கசாமி, துணை ஜனாதிபதியும், புதுச்சேரி மத்திய பல்கலை வேந்தருமான ஜகதீப் தன்கரிடம் பல்கலை தொடர்பாக கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், 1997 முதல் புதுவை பல்கலையில் சில பாடப்பிரிவுகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இப்போது பல புதிய தொழில்முனைவு வாய்ந்த பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டும், அதில் புதுச்சேரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை என்பது வருத்தமான விஷயம். இதுதொடர்பாக 2013-14ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பல்கலையின் கல்வி, நிர்வாக குழுக்களும் ஒப்புதல் அளித்தும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. மத்திய அரசின் கீழ் செயல்படும் ஜிப்மர், காரைக்கால் என்ஐடி நிறுவனங்களில் புதுச்சேரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதுபோல் புதுவை பல்கலையில் உள்ள 64 பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தி உள்ளார்.