பாக் பெண்களை வைத்து இந்தியாவுக்கு எதிராக சதி? பதற வைக்கும் JeM | Jaish-e-Mohammed | Masood Azhar
அமெரிக்கா மற்றும் ஐ.நா சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவன் மசூத் அசார். பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவன். 2001ல் இந்தியாவில் நடந்த பார்லிமென்ட் தாக்குதல், 2016 பதான்கோட் தாக்குதல், 2019 புல்வாமா தாக்குதல் போன்றவற்றுக்கு மூளையாக செயல்பட்டுள்ளான். இந்தியாவால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதி. இப்போது பாகிஸ்தானில் பதுங்கி உள்ளான். பஹல்காம் சம்பவத்தை அடுத்து, இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலின் போது மசூத் அசாரின் குடும்பம் கொல்லப்பட்டது. ஆனால் தாக்குதலில் இருந்து அவன் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதுவரை எங்கே பதுங்கி இருந்தான் என்பது தெரியாத நிலையில் மீண்டும் பயங்கர திட்டத்துடன் வெளியே வந்துள்ளான். ஆபரேஷன் சிந்தூரின் போது மசூத் அசார் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஜெய்ஷ் இ முகமது தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதில் முக்கியமானவன் யூசுஃப் அசார் (Yusuf Azhar). மசூத் அசார் தங்கை சாதியாவின் கணவர். தனது தங்கையின் கணவர் சாவுக்கு பழி வாங்கும் விதமாக, அவரை வைத்தே பெண்கள் பயங்கவாத படையை தொடங்கி உள்ளான் மசூத் அசார். ஜமாத்-உல்-மௌமினாத் (Jamaat-ul-Mominaat) என பெயரிடப்பட்ட இந்த அமைப்புக்கு சாதியா தலைமை தாங்குவார். பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள், ஏற்கனவே பயங்கரவாத அமைப்பில் உள்ளவர்களின் மனைவிகள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக சேர்க்கப்பட உள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஹவல்பூர், கராச்சி, முசாபராபாத், கோட்லி, ஹரிப்பூர் மற்றும் மான்செஹ்ரா ஆகிய இடங்களில் ஆள் சேர்ப்பு மையங்கள் அமைந்துள்ளன. இந்த பிரிவின் செயல்பாடுகள் சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் சில மதரஸாக்களின் வலையமைப்புகள் மூலம் இந்தியாவின் பகுதிகளிலும் பரவி வருகிறது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம் மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் ஆன்லைன் மூலம் இவர்கள் தீவிரமாக இயங்கி வருகின்றனர். பொதுவாக லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகள் பெண்களை ஆயுதமேந்திய ஜிஹாத்களாக மாற்றுவதை தவிர்த்து வந்தன. ஆனால் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு ஆபரேஷன் சிந்தூரின் போது பலத்த அடி வாங்கியதால், பெண்களையும் பயங்கவாத படையில் இறக்கி உள்ளது. இது எதிர்காலத்தில் பெண்கள் படை நேரடியாக பயங்கவாத தாக்குதலில் ஈடுபட வழிவகுக்கும் என்கின்றனர் வல்லுனர்கள். #JaishEMohammed #WomensUnit #JamaatUlMominaat #SadiyaAzhar #MasoodAzhar #OperationSindoor #Terrorism #Bahawalpur #PsychologicalWarfare #IndiaSecurity #PakistanTerror #WomenInTerrorism #JammuKashmir #SocialMediaPropaganda