ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் தவறி விழுந்து சோகம் | Kallikudi Railway Station | Madurai
கால் இடறி ரயிலுக்கு அடியில் விழுந்த ஸ்டேஷன் மாஸ்டர்! வேலை பார்த்த ஸ்டேஷனிலேயே உயிர் பிரிந்த சோகம் திருவனந்தபுரம், ஆரியன்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அனுசேசகர் வயது 32. திருமணம் ஆகி 4 மாத குழந்தை உள்ளது. மதுரை திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேசனில் ஸ்டேஷன் மாஸ்டராக பணி புரிந்தார். கள்ளிக்குடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இன்று மதியம் 12 மணிக்கு அனுசேகருக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் வேலை நிமித்தமாக மதுரை செல்ல அனுசேகர் திட்டமிட்டார். காலை 8.30 மணிக்கு செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கள்ளிக்குடிக்கு வந்தது. அதில் மதுரை செல்ல என்ஜின் அருகே உள்ள பெட்டியில் அனுசேகர் ஏற முயன்றார். அப்போது கால் இடறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்தார். இதில் பின் தலையில் பலத்த அடிபட்டு மயங்கிய அனுசேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரயிலுக்கு அடியில் கிடந்த அனுசேகரின் உடலை ரயில்வே ஊழியர்கள் மீட்டனர். சம்பவம் குறித்து விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.