குமரியில் தன் உயிரை துறந்து 2 சிறுவர்களை காத்த முதியவர் | Kanniyakumari | River Flood
வெள்ளத்தில் குதித்து சிறுவர்களை மீட்டு தன் உயிரை இழந்த செருப்பு தொழிலாளி கன்னியாகுமரி, குழித்துறையில் தாமிரபரணி ஆற்றின் மீது தடுப்பணை உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தடுப்பணை அருகே குழித்துறை சப்பாத்து பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பாலத்தின் மீது பொதுமக்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இருந்தும் அப்பகுதி சேர்ந்த 2 சிறுவர்கள் ஆபத்தை உணராமல் பாலத்தில் சென்றனர். அப்போது அவர்களை வெள்ளம் அடித்து சென்றது. ஆற்றின் மறுகரையில் குளிக்க வந்த 60 வயது முதியவர் பீட்டர் இதை பார்த்துள்ளார். சற்றும் யோசிக்காமல் ஆற்றில் குதித்து நீந்தி சென்று சிறுவர்களை மீட்டார். சிறுவர்கள் இருவரும் பத்திரமாக கரை திரும்பிய நிலையில் பீட்டர் வெள்ளத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். மாயமான பீட்டரை குழித்துறை தீயணைப்பு படையினர் தேடி வந்த நிலையில் 24 மணி நேரத்துக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார். தன் உயிரை தியாகம் செய்து இரண்டு சிறுவர்களை காப்பாற்றிய அவரது தீர செயலை கண்டு அப்பகுதி மக்கள் மனம் உருகினர். இறந்த பீட்டர் செருப்பு தைக்கும் வேலை செய்து வந்தார். மனைவி, மகன், மகள் உள்ள நிலையில் அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.