சுப்ரீம் கோர்ட் நூலகத்தில் கண்கள் திறக்கப்பட்ட நீதி தேவதை சிலை | Lady Justice statue |
இந்தியாவில் நீதி தேவதையின் சிலை கையில் வாளோடும், கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் இருக்கும். அதாவது சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதையும் பணம், அதிகாரத்தை சட்டம் பார்க்காது என்பதையும் குறிக்கும் வகையில் கண்கள் கட்டப்பட்டு இருக்கும். கையில் இருக்கும் வாள் வரலாற்று ரீதியில் அநீதியை தண்டிக்கவும், அதிகாரத்தை நிலை நாட்டுவதையும் குறிக்கிறது. வலது கையில் இருக்கும் தராசு, தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு இரு தரப்பு வாதங்களையும் கவனமாக பரிசீலித்து சமூக சமநிலையை நிலைநாட்டுவதை குறிக்கும். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளுக்கான நூலகத்தில் கண்கள் கட்டப்படாத வாள் இல்லாத நீதி தேவதையின் சிலை திறக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தலின் பேரில் திறக்கப்பட்டுள்ள இந்த சிலையின் சிறப்புகள் என்ன என்பதை பார்க்கலாம். நீதி தேவதையின் கண்கள் திறக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் சட்டம் என்பது ஒரு இருட்டறை அல்ல என்பதை குறிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. புதிய நீதி தேவதை சிலையில் வாளுக்கு பதிலாக அரசியல் அமைப்பு புத்தகம் இடம் பெற்றுள்ளது. வாள் என்பது வன்முறையை குறிப்பதாக இருப்பதால் அதற்கு பதிலாக அரசியலமைப்பு புத்தகத்தை வைத்ததாக சந்திரசூட் தெரிவித்திருந்தார்.