திரும்பும் திசையெல்லாம் கந்தா கோஷம்: முருக பக்தர்கள் மாநாடு நிறைவு | Madurai Murugan Maanadu
மதுரையில் இந்து முன்னணி சார்பில் நேற்று நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாட்டில், லட்சக்கணக்கானோர், பக்தி பரவசத்துடன் குவிந்தனர். சித்திரை திருவிழாவை போல, மதுரையே ஆன்மிக விழாக்கோலம் பூண்டது. வெற்றி வேல்... வீரவேல்... கந்தனுக்கு அரோகரா... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... போன்ற கோஷங்கள் விண்ணை முட்டின. மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே மாநாட்டிற்காக, 8 லட்சம் சதுரடி பரப்பில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டது. இதில், 6 அடி உயரத்தில் சிறிய மேடையும், அதன்பின், 10 அடி உயரத்தில் பெரிய மேடையும் அமைக்கப்பட்டது. குன்றம் காக்க... கோவில் காக்க... என்ற தலைப்பில், வேலுடன் முருகன் நின்ற நிலையில், அதன்பின் கோபுரமும், குன்றமும் இருக்கும் வகையில் அமைக்கப்பட்ட பதாகை பக்தர்களை பரவசப்படுத்தியது. மதியம் 3 மணிக்கு தான் மாநாடு என்றாலும், காலை 10 மணி முதலே வண்டியூர் டோல்கேட் மைதானத்திற்கு பக்தர்கள் வருகை தந்தனர். மாநாட்டிற்கு வந்த பக்தர்கள் மேடைக்கு முன் வந்து அறுபடை முருகனை மனமுருகி வழிபட்டனர். மதியம், 3 மணிக்கு பம்பை இசை நிகழ்ச்சியுடன் மாநாடு துவங்கியது. சிறிய மேடையில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை, 4 மணிக்கெல்லாம் மைதானத்தில் அமைக்கப்பட்ட, 50 கேலரிகளிலும் பக்தர்கள் நிறைந்து காணப்பட்டனர்.