கடைசி நேர கூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் தயார்! Prayagraj | Maha Kumbh | Triveni Sangham
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில், கடந்த மாதம் 13ம் தேதி மகா கும்பமேளா பிரம்மாண்ட திருவிழா துவங்கியது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த மாபெரும் ஆன்மிக திருவிழாவுக்காக மாநில அரசின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஜனவரி 13, 14, 29, பிப்ரவரி 3, 12 ஆகிய தேதிகளில் திரிவேணி சங்கமத்தில் சாஹி ஸ்நான் எனப்படும் சிறப்பு புனித நீராடல் நடந்தது. இதில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பல்வேறு மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் புனித நீராடினர். சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டு பக்தர்கள், தூதரக அதிகாரிகள், சாதுக்கள், சன்னியாசிகள், மடாதிபதிகள் என இதுவரை 60 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். இன்று தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகளும், ரிலைன்ஸ் ரீடைல்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனருமான இஷா அம்பானி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.