மகாராஷ்டிரா தேர்தலில் சட்ட விரோத பண பரிவர்த்தனை குறித்து விசாரணை! Terror fund used in Maharashtra
இந்திய தேர்தல் நடைமுறையை சீர்குலைக்க வெளிநாடுகளை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து முயற்சித்து வருவதாக, மகாராஷ்டிரா முதல்வர் தேவந்திர பட்னவிஸ் சட்டசபையில் பேசினார். காங்கிரஸ் எம்பி ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில், நாட்டுக்கு எதிரான சக்திகள் பங்கேற்றன. நேபாளத்தில் நடந்த கூட்டத்திலும் அந்த சக்திகள் கலந்து கொண்டன. அவர்கள் யாத்திரை பற்றியும், இவிஎம் மிஷின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும் கலந்து ஆலோசித்தனர். இந்தியாவில் பயன்படுத்தப்படும் இவிஎம் மிஷின்களுக்கு எதிராக சில சக்திகள் செயல்படுகின்றன. ஓட்டுப்பதிவு மிஷின்களுக்கு பதில், ஓட்டுச்சீட்டு நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என பல வக்கீல்கள் வலியுறுத்துகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், மிக கொடூர செயல்களில் ஈடுபட்ட பயங்கரங்கரவாதிகளுக்கு ஆதரவாக கோர்ட்டில் ஆஜரானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் போது, மாலேகாவை சேர்ந்த இளைஞர்களின் வங்கிக் கணக்குகளில் மர்ம நபர்கள் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்தனர். அவை பின் வேறொரு கணக்குகளுக்கு மாற்றப்பட்டன. 14 இளைஞர்களின் ஆதார், பான் எண்கள் மோசடியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம், 114 கோடி ரூபாய் சட்ட விரோதமாக பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 1000 கோடி ரூபாய் வரை சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. அதில் 600 கோடி ரூபாய் துபாய்க்கு அனுப்பப்பட்டுள்ளது. 100 கோடி ரூபாய் வரை மகாராஷ்டிரா தேர்தலுக்காக செலவிடப்பட்டுள்ளது.