புல்லட் பைக் ஓட்டியதால் கையை இழந்த மாணவன்! | Manamadurai | Sivaganga police
சினிமாவை மிஞ்சும் நிஜக்கதை அடங்க மறுக்கும் சா(தீ)தி கண்ணீருடன் குடும்பம்! சிவகங்கை, மானாமதுரை அருகே மேலப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன், செல்லம்மா தம்பதியின் 2வது மகன் அய்யாசாமி, வயது19. கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். பட்டியல் சமூகத்தை சேர்ந்த இவர்களிடம் அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. போலீசில் புகார் கொடுத்தாலும் ஊரில் வைத்து பேசி முடித்ததாக தெரிகிறது. இந்த சூழலில் நேற்று மாலை அய்யாசாமி கல்லூரி முடித்து திரும்பும் போது 3 பேர் வழிமறித்து தகராறு செய்துள்ளனர். சாதி பெயரை சொல்லி திட்டி இரண்டு கைகளையும் வெட்டி உள்ளனர். ரத்தம் சொட்ட வீட்டுக்கு ஓடி வந்த அய்யாசாமியை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். உயர் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். கையை சேர்ப்பதற்கான அறுவை சிகிச்சை நடக்கிறது. முன்னதாக குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்ற நேரத்தில் மறுபடியும் வந்த அந்த கும்பல் இவர்களின் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளார்கள். சம்பவத்தில் தொடர்புடைய வினோத், ஆதி ஈஸ்வரன், வல்லரசு ஆகிய மூன்று பேரையும் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதில் வினோத் மற்றும் ஆதி ஈஸ்வரன் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது. எங்கள் சமூகத்தை குறிப்பிட்டு இந்த ஊருக்குள் நடக்கும் அவலம் ஏராளம். அசம்பாவிதம் நடக்கும் என பயந்து இத்தனை நாள் புகார் கொடுக்காமல் இருந்தோம் என அய்யாசாமி உறவினர்கள் கண்ணீருடன் புகார் தெரிவிக்கின்றனர்.