ஸ்டாலின் அதிரடி VS அண்ணாமலை பதிலடி MK Stalin vs K Annamalai | SSA | DMK vs BJP | Dharmendra Pradhan
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வளர்ச்சிக்கு மத்திய கல்வி துறையின் கீழ் செயல்படும் எஸ்எஸ்ஏ எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் நிதி உதவி வழங்கப்படுகிறது. தேசிய கல்வி கொள்கையின் ஒரு வடிவமாக கொண்டுவரப்பட்ட பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராத, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எஸ்எஸ்ஏ திட்ட நிதியை கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு நிறுத்தியது. இதனால் தமிழக அரசு, மத்திய அரசு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கான கல்வி நிதி தரா விட்டால் வழக்கு தொடர்வோம் என்று கல்வி அமைச்சர் மகேஷ் கூறி இருந்தார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதற்கு பதில் அளித்தார். தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. விதிப் படியே நிதி ஒதுக்க முடியும். கல்வி கொள்கையை ஏற்பதாக ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட தமிழக அரசு இப்போது அரசியல் காரணங்களுக்காக ஏற்க மறுக்கிறது. தமிழக அரசு அரசியல் செய்கிறது. அவர்களுக்கு தமிழக வளர்ச்சியில் அக்கறை கிடையாது. தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டம் உள்ளது. அதை ஏற்று தமிழ், ஆங்கிலத்துடன், கன்னடம் முதலான ஏதேனும் ஒரு இந்திய மொழியை மாணவர்கள் கற்கலாம். இதில் என்ன தவறு இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கை உள்ளூர் மொழிக்கே முக்கியத்துவம் தருகிறது. அப்படியெனில் தமிழ் மொழிக்கு எதிராக தமிழக அரசு இருக்கிறதா என்று தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பினார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் காட்டமாக பதில் அளித்தார். அவர் கூறியது: இந்திய அரசியல் அமைப்பு விதிகளுக்குள் தமிழக அரசு வர வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். மும்மொழி கொள்கையை சட்ட விதி என்கிறார். அரசியல் அமைப்பு சட்டத்தின் எந்த பிரிவு மும்மொழிக் கொள்கையை கட்டாயம் ஆக்குகிறது என அவரால் சொல்ல முடியுமா. மாநிலங்களால் ஆனதே இந்தியா. கல்வி ஒத்திசைவு பட்டியலில் தான் உள்ளது. கல்விக்கு மத்திய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல. மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடையாது என பிளாக்மெயில் செய்வதை தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.