ஓபிஎஸ் சந்திப்பு குறித்து ஸ்டாலின் போட்ட பதிவு | M.K.Stalin | DMK | Ex CM OPS | Stalin thanks |
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை அடையாறு பார்க்கில் நடைபயிற்சியின்போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். சென்னையில் இருக்கும் போது நடைபயிற்சி செல்வது வழக்கம் இன்று அப்படி சென்றபோது அவரை சந்தித்தேன். வணக்கம் கூறிவிட்டு சென்றேன் என்றார். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கூட்டணி யாருடன் என்பது பற்றி எதிர்கால நிலைமையை பொறுத்து அறிவிப்போம் என அவரது அணி சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். இந்த பரபரப்பான அறிவிப்புக்கு பின் மாலை மீண்டும் முதல்வர் ஸ்டாலினை பன்னீர்செல்வம் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. பன்னீர்செல்வத்துடன் மகன் ரவீந்திரநாத், முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர். கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேல் இந்த சந்திப்பு நடந்தது. 2வது முறை சந்திப்புக்கு பின் பேசிய பன்னீர்செல்வம், அரசியல் நிமித்தமாக முதல்வரை சந்திக்கவில்லை. அவரது உடல் நலனை விசாரிக்க மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன் என்றார். இந்நிலையில் தன்னை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தன்னை சந்தித்து உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.