இந்தியாவின் வளர்ச்சிக்கான முக்கிய கூட்டாளி ஜப்பான்! Modi Speech at Japan|Modi Speech|Modi at Tokyo
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பானுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு டோக்கியோவில் அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு குழுமிய இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மோடியை பார்த்து உற்சாகம் அடைந்ததுடன், அவரை குதுாகலத்துடன் வரவேற்றனர். ஆடல், பாடல் மற்றும் மந்திரம் ஓதி மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடந்த கலை நிகழ்ச்சிகளை மோடி பார்த்து ரசித்தார். தொடர்ந்து ஜப்பான் பிரதமர் சிகேரு இஷிபாவை மோடி சந்தித்து பேசினர். இரு நாட்டு உறவுகள், தொழில், முதலீடு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இங்கு குழுமியிருக்கும் தொழில் அதிபர்கள் பலர் எனக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆனவர்கள். நான் குஜராத் முதல்வராக இருந்த போது, பலரை சந்தித்துள்ளேன். மெட்ரோ, செமி கன்டக்டர் என பல துறைகளில் இந்தியா - ஜப்பான் இணைந்து செயல்படுகிறது. ஜப்பானின் பல நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தொழிலை பெருக்கி வருகின்றன. இந்தியாவில் தொழில் முதலீடு செய்வது, வெறும் லாபத்தை மட்டும் தருவதல்ல; அது முதலீட்டை பல மடங்காக பெருக்கித் தரும். இந்தியாவில் பண வீக்கம் குறைவாக உள்ளது. வங்கிக் கடனுக்கான வட்டி மிகவும் குறைவாக உள்ளது. இதனால், முதலீடு செய்வதற்கும் தொழில் புரியவும் இந்தியா ஏற்ற நாடாக உள்ளது. 2017ல் ஒரு நாடு ஒரே வரி என்ற திட்டத்தை அமல்படுத்தினோம். அதன் மூலம், பல நன்மைகளை அடைந்துள்ளோம். தற்போது ஜிஎஸ்டி வரி விதிப்பில் மேலும் புதிய சீர்திருத்தத்தை அமல்படுத்த உள்ளோம்.