இந்தியா-சவுதியின் உறவு மேலும் பலப்படும்: மோடி Modi Visit to Saudi Arabia | Modi - Mohammed bin Sa
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் அந்நாட்டு பிரதமருமான முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று, இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி சவுதியின் ஜெட்டா நகருக்கு சென்றார். பிரதமர் மோடியின் விமானம் சவுதி அரேபியாவின் வான்வெளிக்குள் நுழைந்ததும், அந்த நாட்டின் போர் விமானங்கள் மோடியின் விமானத்துடன் சேர்ந்து பறந்து சிறப்பான வரவேற்பை அளித்தன. ஜெட்டா நகரில் மோடி இறங்கியதும், 21 குண்டுகள் முழங்க அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சவுதி அரேபிய அமைச்சர்கள் அதிகாரிகள் மோடியை வரவேற்று அழைத்து சென்றனர். சவுதி அரேபிய பயணம் குறித்து பிரதமர் மோடி குறிப்பிடும்போது, கடந்த 10 ஆண்டுகளில் 3வது முறையாக சவுதிக்கு செல்கிறேன். சகோதரர் இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பு ஏற்று செல்லும் இந்த பயணத்தில் இரு நாட்டு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் இடம் பெறும். ஏற்கனவே நடந்த சந்திப்புகளின் போது, இரு நாட்டு தொழில், வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சி குறித்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது 2வது முறையாக சவுதி இளவரசரை சந்திக்க உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சவுதி இளவரசரின் இந்திய பயணத்தின் போது, பல்வேறு ஆக்கப்பூர்வ விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. தற்போதைய சவுதி பயணத்திலும் பல முன்னெடுப்புகள் இடம் பெறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி - சவுதி இளவரசர் சந்திப்பின் போது, இரு நாட்டு வர்த்தம், பாதுகாப்பு, மேற்கு ஆசிய நாடுகளின் நிலை, இஸ்ரேல் - பாலஸ்தீன போர், ஹவுதி தாக்குதல், கடல் வழி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்திரி கூறினார்.