விருந்தும் ரகசிய பேச்சும்-நாகேந்திரன் வீட்டில் நடந்தது என்ன? nainar nagendran palaniswamy| admk bjp
‛மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார். அவர் திருநெல்வேலி வரும் போது, தனது வீட்டில் விருந்து கொடுப்பேன் என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதிமுக, பாஜ கூட்டணியில் இணக்கத்தை ஏற்படுத்த இந்த விருந்து நிகழ்ச்சி கை கொடுக்கும் என்று நாகேந்திரன் சொல்லி இருந்தார். கண்டிப்பாக விருந்தில் பங்கேற்பேன் என்று பழனிசாமியும் உத்தரவாதம் அளித்து இருந்தார். ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி வந்த பழனிசாமி, பிரசாரம் முடிந்ததும் நேரே நாகேந்திரன் வீட்டுக்கு சென்றார். அவருடன் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் சென்றனர். ஏற்கனவே, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜ மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை உள்ளிட்டோரும் நாகேந்திரன் வீட்டுக்கு வந்திருந்தனர். 2026 தேர்தலில் வென்றால், கூட்டணி ஆட்சி தான் என்று பாஜவினர் சொல்லி வந்த விஷயம் அதிமுக கூட்டணியில் புகைச்சலை உண்டு பண்ணி இருந்தது. அதை சரி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த தடபுடல் விருந்தை நாகேந்திரன் ஏற்பாடு செய்திருந்தார். விருந்துக்கு முன்பு அதிமுக, பாஜ தலைவர்கள் சிறிது நேரம் ஆலோசித்தனர். பின்னர் நாகேந்திரன் வீட்டு மாடியில் உள்ள தனி அறைக்கு பழனிசாமியும், நாகேந்திரனும் சென்றனர். அரை மணி நேரம் மேலாக 2 பேரும் தனியாக ஆலோசனை நடத்தினர்.