உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வலிமையான இந்தியாவால் உலகம் வளம்பெறும்: மோடி உறுதி Modi Speech at Ghana | Narendra Modi at Ghana

வலிமையான இந்தியாவால் உலகம் வளம்பெறும்: மோடி உறுதி Modi Speech at Ghana | Narendra Modi at Ghana

அரசு முறை பயணமாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி அந்நாட்டு அதிபர் கவுரவித்தார். கானா பார்லிமென்ட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். கானா எம்பிக்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், கானா வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் 140 கோடி இந்தியர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். கானாவின் உயரிய விருதை எனக்கு வழங்கிய ஜனாதிபதி மஹாமாவுக்கு 140 கோடி இந்தியர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். ஜனநாயகத்தின் தாய் இந்தியா. ஜனநாயகம் என்பது எங்களுக்கு அடிப்படை கலாசாரம். நல்ல விஷயம் எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என, உலகின் பழமையான ரிக் வேதம் சொல்கிறது. அதைத் தான் நாங்கள் செய்கிறோம். எங்கள் நாட்டில் 2,500 அரசியல் கட்சிகள் உள்ளன. 20 வெவ்வேறு அரசியல் கட்சிகள் வெவ்வேறு மாநிலங்களில் ஆட்சி செய்கின்றன. 22 அலுவல் மொழிகள் உள்ளன. 1,000க்கும் மேற்பட்ட மொழிநடைகள் பேச்சு வழக்கில் உள்ளன. உலகின் எப்பகுதியில் இருந்து வருவோரையும் இந்தியா மனதார வரவேற்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று என நான் நினைக்கிறேன். எங்கள் மக்கள் உலகின் எந்தப் பகுதிக்கு சென்றாலும், அந்த பகுதி மக்களோடு ஒன்றோடு ஒன்றாகிவிடுவர். கானாவிலும் அப்படித் தான் இந்தியர்கள் உள்ளனர். டீயுடன் கலந்த சர்க்கரை போல் மாறிவிடுகின்றனர். இந்தியாவும், கானாவும் மிகப் பெரிய கலாசார பின்னணி உடையது. இரண்டு நாடுகளும் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து சுதந்திரம் பெற்றன. இந்தியா - கானா நட்பு மிக இனிமையானது. குளோபல் சவுத் நாடுகளின் மீது கவனம் செலுத்தாமல், உலக நாடுகளின் வளர்ச்சி என்பது சாத்தியம் அல்ல. ஒரே நாடு, ஒரே வளர்ச்சி என்பதை முன்னிறுத்தி நாங்கள் ஜி20 மாநாட்டை நடத்தினோம். மனிதநேயத்திற்கு முதலிடம் என்பதே இந்தியாவின் கொள்கை. அனைவரும் நலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். அனைவரும் நோயின்றி வாழ வேண்டும். எல்லோரும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே எங்கள் அடிப்படை நோக்கமாக உள்ளது. கோவிட் பாதிப்பின் போது, அதற்கான தடுப்பூசியை தயாரித்து, கானா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நாங்கள் வழங்கினோம். சோலார் மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். காடுகளை பாதுகாக்க வேண்டும். கிரீன் எனர்ஜி தயாரிப்பை ஊக்குவிக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி என்பதற்குத் தான் இந்தியர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர். அதற்காகத்தான் எனது தலைமையிலான அரசை மூன்றாவது முறையாக இந்தியர்கள் தேர்ந்தெடுத்தனர். இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது. விரைவில் மூன்றாவது பொருளாதார சக்தியாக உருவெடுக்கும். சந்திரயான் திட்டத்தில் இந்தியா மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் பெருமைமிகு தருணங்களில் ஆப்பிரிக்காவின் பங்களிப்பும் இருந்துள்ளது. அனைவருக்குமான வளர்ச்சி என்பதே எங்கள் நோக்கமாக இருந்து வருகிறது. 2047ல் இந்தியா 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் வளர்ச்சி அடைந்த நாடாக உருவெடுத்திருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா எவ்வளவு வலிமை அடைகிறதோ, அந்தளவுக்கு உலக நாடுகளுக்கும் நன்மைகள் கிடைக்கும். எல்லோருடனான முயற்சியுடன் எல்லோருக்குமான வளர்ச்சியை நோக்கி பயணிப்பதே எங்கள் இலக்கு. எங்கள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் பாட்னராக ஆப்பிரிக்கா இருந்து வருகிறது. ஐடி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் துறையில் கானா வளர்ச்சி அடைய நல்ல வாய்ப்புகள் உள்ளன. சுதந்திரமான தேர்தல் நடைமுறை கானாவின் வலிமை, வளர்ச்சிக்கு வழி வகுக்கும். அந்த வகையில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அதன் தேர்தல் நடைமுறையை கானாவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது. மிப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பார்வையிட கானா மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். பார்லிமென்ட்டில் மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் சுதந்திரமான, வெளிப்படையான பார்லிமென்ட் நிகழ்வுகளை நீங்கள் காணலாம். இந்தியாவின் இதயத்தில் ஆப்பிரிக்கா குடிகொண்டுள்ளது. இந்தியா - கானா நாடுகளின் கனவுகள் நிறைவேற இணைந்து செயல்படுவோம். இரு நாடுகள் இடையிலான நட்பு, உறவு இன்றைக்கானது மட்டுமல்ல வருங்கால தலைமுறைக்கானதும் கூட என பிரதமர் மோடி கூறினார்.

ஜூலை 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை