பாகிஸ்தானுக்கு நாள் குறித்த மோடி-பரபரப்பு தகவல் | kashmir pahalgam attack | ind vs pak | modi plan
நாட்டையே உலுக்கிய காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானில் புகுந்து அடிக்க இந்தியா தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. தாக்குதல் திட்டம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். காரணம், பிரதமர் மோடி அடுத்தடுத்து நடத்திய ஆலோசனை கூட்டம் தான். அதாவது, சம்பவம் நடந்த போது மோடி சவுதியில் இருந்தார். உடனடியாக இந்தியா புறப்பட்டு வந்தார். ஏர்போர்ட்டிலேயே அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் முக்கிய அமைச்சர்களையும் சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 26ம் தேதி மோடி, ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்ற முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. தாக்குதல் நடத்த வேண்டிய இடங்கள், நேரம், தாக்குதல் நடத்தும் விதம் குறித்து முடிவெடுக்க முப்படைக்கும் மோடி முழு சுதந்திரம் வழங்கினார். அதோடு நிற்கவில்லை. ஒவ்வொருவரையும் தனித்தனியாகவும் சந்தித்து ஆலோசிக்க ஆரம்பித்தார். 30ம் தேதி ராணுவ தளபதி உபேந்திர திவேதியுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் பங்கேற்றனர். சனிக்கிழமை கடற்படை தளபதி தினேஷ் திரிபாதியை சந்தித்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். ஞாயிற்றுக்கிழமை விமானப்படை தளபதி ஏபி சிங்கை தனது இல்லத்தில் சந்தித்தார். அவருடன் 40 நிமிடம் மோடி ஆலோசித்தார். இந்த நிலையில் இன்றும் பதிலடி திட்டம் தொடர்பாக மோடி மீட்டிங் நடத்தினார். பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கை சந்தித்து அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். 26ம் தேதி யாரிடமெல்லாம் மொத்தமாக ஆலோசனை நடத்தினாரோ, அவர்களிடம் எல்லாம் இப்போது தனித்தனியாகவும் பேசி முடித்து விட்டார். கிட்டத்தட்ட அனைத்து விதமான திட்டமும் தயாராகி விட்டது. தாக்குதல் நடத்த வேண்டிய நாளும் இதில் தீர்மானிக்கப்பட்டு இருக்க கூடும். எனவே இந்த கணம் முதல் எந்த நேரத்திலும் பாகிஸ்தானில் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தலாம். 2019ல் நம் வீரர்கள் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை விட இந்த முறை மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்பது மட்டும் உறுதி என்கின்றனர் பாதுகாப்பு நிபுணர்கள்.