நீட் மோசடி கும்பலை தோலுரித்து காட்டிய சிபிஐ | Neet question paper leak | CBI | Fraud gang
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாகில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் இந்த மோசடி நடந்தது உறுதியாகி உள்ளது. தேர்வு நடந்த ஒயாசிஸ் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஈஷானுல் ஹக், அந்த நகரின் தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளார். இவரையும், பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் இம்தியாஸ் ஆலமையும், இந்த மோசடியின் முக்கிய நபரான பங்கஜ் குமார் தொடர்பு கொண்டுள்ளார். இவர்கள் மூவரும் சேர்ந்து, தேர்வு நடந்த மே 5ம் தேதி காலை பாதுகாப்பு பெட்டியில் இருந்து வினாத்தாளை எடுத்து படம் பிடித்துள்ளனர். பீகாரின் சில பிரபலமான மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலரை, ஹசாரிபாகில் ஒரு இடத்தில் தங்க வைத்திருந்தனர். வினா தாள்களுக்கு அந்த மாணவர்கள் விடை அளித்துள்ளனர். அவற்றை, பணம் கொடுத்த, நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பகிர்ந்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட பங்கஜ் குமார், தேர்வு நடந்த பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர், வினாக்களுக்கு விடை எழுதி தந்த மாணவர்கள், அவற்றை விலைக்கு வாங்கிய மாணவர்கள் என 35க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.