நம்பி சென்ற இளைஞருக்கு காத்திருந்தது அதிர்ச்சி | Delhi | Dating app | Dating app Fraud
டில்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர் ஒருவருக்கு டிண்டர் டேட்டிங் ஆப் வாயிலாக வெர்ஷா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தன் பிறந்த நாளை கொண்டாட பிளாக் மிர்ரர் கபே என்ற காபி ஷாப்புக்கு அந்த இளைஞரை வர்ஷா அழைத்துள்ளார். அங்கு சென்ற இளைஞர், இளம்பெண்ணுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இருவரும் பேசி கொண்டிருந்த போது, வீட்டில் இருந்த அழைப்பு வந்ததாக கூறி அந்த பெண் அவசரமாக கிளம்பி சென்றார். இளைஞரிடம் சாப்பிட்டதற்கான பில் வழங்கப்பட்டது. சில ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே இருவரும் சாப்பிட்ட நிலையில் 1 லட்சத்து 22 ஆயிரத்துக்கு பில் கொடுக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஓட்டல் நிர்வாகத்திடம் முறையிட்ட போது, இளைஞரை மிரட்டிய ஊழியர்கள் அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பணத்தை வசூலித்தனர். அப்பகுதியில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் இளைஞர் புகாரளித்தார். ஓட்டல் உரிமையாளர் அக் ஷய் பாஹ்வாவிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சம்பந்தப்பட்ட ஓட்டலை அக் ஷய், அவரின் நண்பர்களான வன்ஷ் பாஹ்வா மற்றும் ஆன்ஷ் குரோவர் சேர்ந்து நடத்தி வந்தனர். ஓட்டல் மேனேஜர் ஆர்யன், வெர்ஷா என்ற பெண்ணை பாதிக்கப்பட்ட இளைஞருடன் டிண்டர் ஆப் வாயிலாக போலி கணக்கை உருவாக்கி பழக வைத்துள்ளார். அதன்படி, அவரை வரவழைத்து இந்த மோசடி அரங்கேறி உள்ளது. வெர்ஷாவின் இயற்பெயர் அப்சான் பர்வீன். இந்த மோசடி வாயிலாக கிடைக்கும் தொகையில், அந்த பெண்ணிற்கு 15 சதவீதமும், உதவும் பணியாளர்களுக்கு 45 சதவீதமும், மீதமுள்ள 40 சதவீதம் உரிமையாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது விசாரணையில் தெரிந்தது என போலீசார் கூறி உள்ளனர். அப்சான் பர்வீன், அக் ஷய் பாஹ்வா உள்ளிட்ட ஐந்து பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்.