ஆளும் திமுகவில் வருகிறது முக்கிய மாற்றங்கள்! | DMK | MKStalin | Udhayanidhi
ஆளும் திமுகவில் வருகிறது முக்கிய மாற்றங்கள்! | DMK | MKStalin | Udhayanidhi ஜனவரி 21ல் சேலம் திமுக இளைஞரணி மாநாடு முடிந்ததும் அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் லோக்சபா தேர்தலுக்கு முன் பதவி வழங்கினால் அதுவே எதிர்கட்சிகளின் வாரிசு அரசியல் பிரசாரத்துக்கு வழி வகுக்கும் என மூத்த நிர்வாகிகள் அட்வைஸ் செய்தனர். துணை முதல்வர் பதவி என்பது வதந்தி என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். முதல்வருக்கு துணையாக எல்லா அமைச்சர்களும் இருக்கப்போகிறோம், எனக்கு பதவி தருவது பற்றி முதல்வர் தான் முடிவு செய்வார் என உதயநிதி கூறினார். இது தவிர சனாதனம் தொடர்பான வழக்குகளில் சட்ட ரீதியான சில நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருந்ததாலும் துணை முதல்வர் பதவியை தர திமுக தலைமை முன் வரவில்லை. இப்போது முதல்வர் ஸ்டாலின் இம்மாத இறுதியில் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளார். அங்கு அதிக நாட்கள் தங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் முதல்வர் பணிகளை கவனிக்கும் விதமாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இது தவிர லோக்சபா தேர்தலில் ஓட்டு சதவீதம் குறைந்த தொகுதிகளுக்கு பொறுப்பேற்ற அமைச்சர்களின் இலாகாக்களை பறிக்கவும் திமுக தலைமை ஆலோசித்துள்ளது. மூத்த அமைச்சர்கள் சிலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால் அவர்களிடம் இருந்து பொறுப்புகளை பறித்து உதயநிதியின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப செயல்படும் அமைச்சர்களிடம் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்ததும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியை வழங்கவும், அமைச்சர்கள் மாற்றம் இலாகாக்கள் மாற்றம் செய்யவும் வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.