அடுத்த கட்ட பாய்ச்சலை நோக்கி போகும் சென்னை | Vladivostok-Chennai | Modi Russia
அடுத்த கட்ட பாய்ச்சலை நோக்கி போகும் சென்னை | Vladivostok-Chennai | Modi Russia இந்தியா - ரஷ்யா இடையிலான 22வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்யா சென்றார். ரஷ்யா உக்ரைன் போருக்கு பின் மோடி ரஷ்யாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. கடைசியாக 2019ல் மோடி ரஷ்யாவுக்கு சென்றிருந்தார். அப்போது சென்னை - விளாடிவோஸ்டாக் கடல்வழி தடம் பற்றி யோசனைகளை முன்வைத்தார். 2019 செப்டம்பரில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி சென்னை துறைமுகத்துக்கும், விளாடிவோஸ்டாக் துறைமுகத்துக்கும் இடையே கடல் வழித்தடம் அமைக்கப்படும். சென்னையில் துவங்கும் இந்த வழித்தடம் தாய்லாந்து வழியாக மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், ஷாங்காய், ஜப்பான், தென் கொரியா, விளாடிவோஸ்டாக் வரை நீள்கிறது. கோவிட் காரணமாக 2022 வரை இந்த திட்டத்தில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. தொடர்ந்து உக்ரைன் போர் தொடங்கி பேச்சுவார்த்தை மொத்தமாக மூடியது. இப்போது மோடியின் ரஷ்ய பயணம் மூலம் சென்னை - விளாடிவோஸ்டாக் கடல் வழித்தடம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. இது குறித்து மோடி ரஷ்ய அதிபர் புதினிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே இந்திய வம்சாவளியினர் மத்தியில் மோடி பேசியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வடக்கு தெற்கு போக்குவரத்து காரிடர் வழியாக முதல் வணிக கப்பல் இங்கு வந்தடைந்தது. இப்போது சென்னை - விளாடிவோஸ்டாக் கடல்வழி சரக்கு போக்குவரத்து வழித்தடத் திட்டம் குறித்து விவாதித்து வருகிறோம் என மோடி பேசினார். சென்னை - விளாடிவோஸ்டாக் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இந்தியா ரஷ்யா இடையே 40 நாட்களாக உள்ள கடல் வழி பயண நேரம் 24 நாட்களாக குறையும். சென்னை முக்கிய துறைமுகமாக மாறும். 10 நாடுகளில் இருந்து பொருட்கள் குறைந்த செலவில் இறக்குமதி செய்ய முடியும். சென்னையில் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.