சர்ச்சை ஐஏஎஸ் அதிகாரி பூஜா எங்கே போனார்? Controversial IAS Puja Khaedkar
சர்ச்சை ஐஏஎஸ் அதிகாரி பூஜா எங்கே போனார்? Controversial IAS Puja Khaedkar | Lal Bahadur Shastri National Academy of Administration | Mussoorie மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில், பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிவர் பூஜா கேட்கர், வயது 34. தனது ஆடி காரில் சைரன் பொருத்திக் கொண்டும், மகாராஷ்ட்ர அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டும் உலா வந்தார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் மாவட்ட கலெக்டருக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் அவர் மீது புகார்கள் கிளம்பின. இதையடுத்து அவர் வாசிம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் முறைகேடான வழியில் ஐஏஎஸ் ஆனது தெரிய வந்தது. ஐ.ஏ.எஸ் தேர்வின் போது அவர் கொடுத்திருந்த பார்வைக்குறைபாடு மாற்றுத்திறனாளி சான்றிதழ் மீது சந்தேகம் எழுந்தது. பிறகு அந்த சான்றிதழ் போலி முகவரி, ரேஷன் கார்டு மூலம் பெற்றது தெரிய வந்தது. லோக்சபா தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பூஜாவின் தந்தை திலிப் ராவ் கேத்கர் போட்டியிட்டார். வேட்பு மனுவில் ஆண்டு வருமானம் 43 லட்ச ரூபாய் என்றும், ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 40 கோடி ரூபாய் என குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தனது குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சம் என குறைத்து காட்டி, போலி சான்றிதழ் தாக்கல் செய்து இடஒதுக்கீடு சலுகை பெற்றதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது. இந்த புகார்களை தொடர்ந்து பூஜா கேத்கரின் பயிற்சியை மகாராஷ்ட்ர அரசு ரத்து செய்தது. மத்திய அரசும் இது தொடர்பாக விசாரணை குழு மூலம் விசாரித்தது. பூஜா யு.பி.எஸ்.சி தேர்வின்போது தாக்கல் செய்த ஆவணங்களில் பெற்றோர் பெயரை மாற்றியது அடையாள அட்டையில் புகைப்படத்தை மாற்றியது உட்பட பல மோசடிகளை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது டில்லி போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க முசோரி ஐ.ஏ.எஸ் பயிற்சி அகாடமி முடிவு செய்தது. ஜூலை 23ம்தேதிக்குள் அகாடமிக்கு வர வேண்டும் என அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் பூஜா அகாடமிக்கு செல்லவில்லை. மொபைல் போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார். அவரை எந்த வழியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தலைமறைவானதாக சொல்லப்படுகிறது. பூஜாவின் தந்தை திலிப் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதால் எந்த வகையில் இட ஒதுக்கீடு கிடைக்கும் என அவருக்கு நன்றாக தெரிந்திருந்தது. அவர்தான் தனது மகளுக்கு வழிகாட்டி இதுபோல மோசடி செய்து ஐஏஎஸ் ஆக உதவியிருக்க வேண்டும் என டில்லி போலீசார் சந்தேகப்படுகின்றனர். இது ஒரு புறம் இருக்க விவசாயியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் பூஜாவின் தாய் மனோரமா, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தந்தை திலிப் முன்ஜாமின் பெற்றார்.