ஜார்க்கண்ட்டில் பாஜவின் அரசியல் ஆட்டம் ஆரம்பம் Speculation over Champai Soren Joining with BJP
ஜார்க்கண்ட்டில் பாஜவின் அரசியல் ஆட்டம் ஆரம்பம் Speculation over Champai Soren Joining with BJP| Jharkhand Politics| Hemant Soren| JMM| BJP ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பிப்ரவரியில் நிலமோசடி வழக்கில் சிக்கியபோது பதவியை ராஜினாமா செய்தார். தமது ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவர் சம்பை சோரனை முதல்வர் பதவியில் அமர்த்திவிட்டு சிறைக்கு சென்றார். சிபுசோரன் அவரை தொடர்ந்து மகன் ஹேமந்த் சோரன் என ஜேஎம்எம் ஆட்சியில் ஒரு குடும்பம் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், சம்பை சோரன் முதல்வர் ஆனது கட்சிக்குள் வரவேற்பையும், புகைச்சலையும் ஏற்படுத்தியது. சம்பை தலைமையிலான அரசு மக்கள் மனதில் நற்பெயர் எடுக்க துவங்கிய நிலையில், ஆறே மாதங்களில் ஜாமினில் வெளியே வந்தார் ஹேமந்த். சம்பையின் வளர்ச்சியை பிடிக்காத சக அமைச்சர்கள், சம்பைக்கு எதிராக அரசியல் செய்ய துவங்கினர். ஹேமந்தை மீண்டும் முதல்வர் பொறுப்பேற்க வலியுறுத்தினர். சிறையில் இருந்து வெளியே வந்து ஒரு வாரத்திற்குள் சம்பையை பதவி விலக செய்துவிட்டு, மீண்டும் முதல்வர் ஆனார் ஹேமந்த். முதல்வர் பதவியை பறித்தது சம்பைக்கு வேதனையை அளித்தது. தமது அதிருப்தியை அப்போதே அவர் சூசகமாக வெளிப்படுத்தினார். எனினும், ஹேமந்த் அதை கண்டுகொள்ளவில்லை. ஹேமந்த்- சம்பை இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக பனிப்போர் நிலவுகிறது. எனினும் இருவரும் வெளிப்படையாக அதை காட்டிக்கொள்ளவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் ஜார்க்கண்ட் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், சம்பை சோரன் எப்போது வேண்டுமானாலும் பாஜவுக்கு தாவலாம் என்ற தகவல் பரவுகிறது. ஆனால், அது எந்தளவுக்கு நம்பத்தகுந்தது என்று தெரியவில்லை என்று ஜார்க்கண்ட் பாஜ மேலிட பொறுப்பாளர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சொன்னார். ஜார்க்கண்ட் அரசியலில் மிகப் பெரும் தலைவராக திகழ்பவர் சம்பை சோரன். கடந்த 5 ஆண்டு கால ஜேஎம்எம் கூட்டணி ஆட்சியில் சம்பை முதல்வராக இருந்த போதுதான் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என ஹிமந்தா கூறியிருக்கிறார். மத்திய அமைச்சரும் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பொறுப்பாளருமான சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் சமீபத்தில் நடந்த பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் கூட சம்பை சோரன் வருகை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில பாஜ தலைவர் தீபக் பிரகாஷ் கூறும்போது, சம்பை சோரன் முதல்வராக இருந்தபோது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவரது பதவி பறிக்கப்பட்டது துரதிஷ்டமானது சம்பை போன்ற முதுபெரும் தலைவருக்கு இப்படி நடந்தது அந்த கட்சிக்கு பின்னடைவைதான் ஏற்படுத்தும் என்றார்.