உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரூட்டை மாற்றிய இபிஎஸ்: அடுத்த ஆபரேஷன் ஆரம்பம் | ADMK | Seeman | TVK

ரூட்டை மாற்றிய இபிஎஸ்: அடுத்த ஆபரேஷன் ஆரம்பம் | ADMK | Seeman | TVK

ரூட்டை மாற்றிய இபிஎஸ்: அடுத்த ஆபரேஷன் ஆரம்பம் | ADMK | Seeman | TVK 2021 சட்டசபை தேர்தலை அதிமுக வலுவான கூட்டணியுடன் எதிர்கொண்டாலும் வெற்றி பெற முடியவில்லை. திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன்பின் நடந்த உள்ளாட்சி தேர்தல், சட்டசபை இடைத்தேர்தல், லோக்சபா தேர்தல் என தொடர்ந்து திமுக கூட்டணியிடம் அதிமுக தோற்றது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் பல இடங்களில் அதிமுக மூன்றாம் இடத்துக்கும் தள்ளப்பட்டது. சில இடங்களில் டெபாசிட்டும் இழந்தது. இதனால் கட்சியின் எதிர்காலம் என்னவாகுமோ என்கிற கவலை அதிமுகவினரை தொற்றிக்கொண்டது. இதனால் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் பன்னீர்செல்வம், சசிகலா, தினகரனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர். ஆனால் அவர்களை கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். இருந்தாலும் கட்சியின் நலன் கருதி அவர்கள் சொன்ன ஆலோசனைகள் பழனிசாமியை யோசிக்க வைத்துள்ளது. திமுக சமீப காலங்களில் கூட்டணி பலத்தால் வெற்றி பெற்று வருகிறது. அதிகபட்சமாக 53 சதவீதம், குறைந்தபட்சமாக 46 சதவீத ஓட்டுகளை திமுக கூட்டணி பெற்றுள்ளது. திமுக கூட்டணியை வெல்ல வேண்டும் என்றால் அவர்களது ஓட்டு சதவீதத்தை குறைக்க வேண்டும். அது முடியவில்லை என்றால் திமுக கூட்டணி ஓட்டு சதவீதத்தை தாண்டி அதிமுக அதிக ஓட்டுகள் பெற வேண்டும். இப்போது இருக்கும் சூழலில் அதிமுகவால் தனித்து இதை செய்ய முடியாது. திமுகவை எதிர்த்து தமிழகத்தில் வலுவான கூட்டணி இல்லை. அதிமுக கூட்டணி, பாஜ கூட்டணி, நாம் தமிழர் என ஓட்டுகள் பிரிந்து செல்கிறது. திமுக கூட்டணியை வெல்ல வேண்டும் என்றால் அவர்களுக்கு எதிராக வரும் ஓட்டுகள் ஒன்றுபட வேண்டும். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட்டு திமுக எதிர்ப்பு ஓட்டுகளை பிரித்தால் மீண்டும் திமுக கூட்டணியே வெற்றி பெறும். ஒருவேளை அக்கட்சி அதிமுக ஓட்டுகளை பிரித்தால் அது அதிமுகவுக்கு இன்னும் பலவீனமாகும். அதனால் எப்படியாவது திமுகவுக்கு எதிராக வலுவான ஒரு கூட்டணியை கட்டமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அதிமுக கூட்டணியில் நாம் தமிழர், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், பாமகவை இடம் பெற வைக்க வேண்டும் என அதிமுகவினர் விரும்புகின்றனர். மூத்த தலைவர்கள் சிலர் இதுபற்றி பழனிசாமியிடம் புள்ளி விபரங்களுடன் எடுத்து கூறியுள்ளனர். எனக்கு நம்பிக்கை இல்லை; இருந்தாலும் அப்படியொரு கூட்டணி அமைக்க முயற்சிக்கலாம். பேசிப் பாருங்கள் என கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார் பழனிசாமி. இப்போது சீமான், விஜய் தரப்பிடம் பேச்சுவார்த்தை ஆரம்பமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை இதே இலக்கில் கொண்டு செல்லவும் பழனிசாமி சம்மதித்துள்ளார்.

ஆக 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ