அடுத்த 2 ஆண்டுகளுக்கு கொஞ்சம் திண்டாட்டம் தான் | Metro train work | Guindy new line
அடுத்த 2 ஆண்டுகளுக்கு கொஞ்சம் திண்டாட்டம் தான் | Metro train work | Guindy new line | Nandambakkam | Chennai | சென்னையில் மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் தடமும் ஒன்று. மாதவரம் பால் பண்ணையில் துவங்கி அண்ணா நகர், கோயம்பேடு, ஆலந்துார், புழுதிவாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம் கூட்டுசாலை, பெரும்பாக்கம் வழியாக சோழிங்கநல்லுாரை அடைகிறது. இதில், பட்ரோடு பகுதியில் மெட்ரோ பணிக்காக பரங்கிமலை - பூந்தமல்லி சாலையில், போக்குவரத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பாதிக்காமல் இருக்க, நந்தம்பாக்கம், வர்த்தக மையம் எதிரில் இருந்து கத்திப்பாரா - ஈக்காட்டுதாங்கல் ஜி.எஸ்.டி சாலை, ஒலிம்பியா டெக்பார்க் சந்திப்பு வரை, புதிய சாலை அமைத்து, அந்த வழித்தடத்தில் வாகனங்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1 கி.மீ துாரத்திற்கு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடத்தில், அடுத்த 2 ஆண்டுகளுக்கு வாகனங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் இதற்கான வெள்ளோட்டம் பார்க்கப்பட உள்ளது. இந்த புதிய வழித்தடத்தில் அனைத்து வாகனங்களையும் இயக்கும்போது, ஒலிம்பியா டெக் பார்க் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அங்கு, முன்னெச்சரிக்கை பணிகளை போக்குவரத்து போலீசார் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரத்தில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் காலை, மாலை நேரத்தில் கோயம்பேடு நோக்கி செல்கின்றன. பூந்தமல்லி, போரூரில் இருந்து வரும் வாகனங்களுக்காக, ஒலிம்பியா டெக்பார்க் சிக்னல் நேரம் அதிகப்படுத்தும்பட்சத்தில், இரண்டு பக்கமும் ஏராளமான வாகங்கள் அணிவகுத்து நிற்க அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு தீர்வாக, பரங்கிமலை - பூந்தமல்லி சாலையில் மாநகர பஸ்களை மட்டும் வழக்கம் போல் இயக்க வேண்டும். அதற்கான வழித்தடத்தை ஏற்படுத்தி கொடுக்க மெட்ரோ நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், பாதுகாப்பு காரணத்தை சொல்லி அவர்கள் மறுத்துவிட்டனர். வேறுவழியின்றி, புதிய வழித்தடத்திலேயே அனைத்து வாகனங்களையும் இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முதலில் இரவிலும், பின் வார விடுமுறை நாட்கள், அதனை தொடர்ந்து தினமும் இயக்கப்படும் வகையில் போக்குவரத்து மாற்றம் இருக்கும். அந்த சமயத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பது பற்றி ஆலோசித்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.