மெடிக்கல் காலேஜ் டீனுக்கே மே.வங்கத்தில் பாதுகாப்பில்லை west bengal medical college
மெடிக்கல் காலேஜ் டீனுக்கே மே.வங்கத்தில் பாதுகாப்பில்லை west bengal medical college deans meeting IMA kolkata woman doctor death கொல்கத்தா ஆர்.ஜி கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செயயப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் சஞ்சய் ராயை போலீசார் சில மணிநேரங்களில் கைது செய்தனர். ஆனாலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் பல மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆர்.ஜி கர் மருத்துவமனையில் நடந்த சில தவறுகளை பெண் டாக்டர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் டாக்டரின் மரணத்துக்கு பின்னால் பெரிய சதி இருக்குமோ? என சந்தேகப்படுவதாக, அவரது தோழி பகீர் கிளப்பினார். பெண் டாக்டர் சம்பவத்தால் ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து விலகிய சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக விசாரித்து வருகின்றனர். அவர் மீது பல புகார்களை டாக்டர்களும், மருத்துவ மாணவர்களும் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் சுகாதாரத்துறை கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும், டாக்டர்கள், மற்றும் பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவமனையில் உகந்த சூழலை ஏற்படுத்துவது தொடர்பாகவும், இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் நடத்தப்பட்டது. இதில், மேற்கு வங்கத்திலுள்ள 15க்கு மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து கொல்கத்தா வட்டாரங்கள் கூறியதாவது: பயிற்சி டாக்டர் கொலை சம்பவத்துக்கு பிறகு, சந்தீப் கோஷ் பல குளறுபடிகளை செய்து விட்டார்; இதனால் மருத்துவ துறைக்கே களங்கம் ஏற்பட்டு விட்டது என அனைத்து முதல்வர்களும் குற்றம்சாட்டினர். மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனைகளும் அரசு மருத்துவக் கல்லூரிகளும் சுகாதாரத்துறையில் அரசியல் செல்வாக்குமிக்க சில அதிகாரிகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது; நாங்கள் முதல்வராக இருப்பது வெறும் ஏட்டளவில்தான் என, சில முதல்வர்கள் வேதனை தெரிவித்தனர். மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி்களுக்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதிலும் அவர்கள் மாபியா கும்பல் போல செயல்படுகிறார்கள்; மருந்துகள் பயன்பாட்டில் கூட அவர்கள் தலையிடுகின்றனர். அவர்கள் சொல்படி கேட்டு நடக்காவிட்டால் மிரட்டல் வரும்; அவமானம் தான் மிஞ்சும் என சில முதல்வர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஒரு அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வராக பதவி வகிக்கும் பெண் தனது அனுபவத்தை கூட்டத்தில் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். மேற்கு வங்க மருத்துவக் கவுன்சிலில் பொறுப்பு வகிக்கும் ஒரு ஜூனியர் டாக்டர் என்னை சந்தித்தார். நார்த் பெங்கால் குழுவுக்கு ஏன் நீங்கள் ஒப்பந்தம் வழங்கவில்லை என கேட்டு என்னை திட்டி அவமானப்படுத்தினார். என் குடும்பத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. எப்படி வீட்டை விட்டு உங்கள் குழந்தைகள் வெளியே வருகிறார்கள் என பார்க்கிறோம் என மிரட்டிவிட்டு சென்றார். இதுபற்றி சுகாதாரத்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றும், அந்த ஜூனியர் டாக்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பெண் முதல்வர் கவலையுடன் சொன்னார். மேற்கு வங்க சுகாதாரத்துறையில் பணியாற்றும் சில பேராசை பிடித்த அதிகாரிகள் தங்களுக்கு உள்ள அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இப்படியெல்லாம் மருத்துவ துறையை ஆட்டிப்படைக்கிறார்கள். தங்களுக்கு வேண்டிய மாணவர்களுக்காக கேள்வித்தாளை லீக் செய்கிறார்கள். ஒரு கல்லூரியில் தேர்வு துவங்குவதற்கு முன், சூபர்வைசராக வந்த பேராசிரியரே கேள்வித்தாளை லீக் செய்கிறார். இப்படியே போனால் மேற்கு வங்கத்தில் மருத்துவ கல்வியின் நிலை என்னாகும்? என ஒரு சில முதல்வர்கள் வருத்தத்துடன் கேட்டனர். கூட்டம் முடிந்த பிறகு, இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க சுகாதாரத்துறையில் உள்ள சில பதவி ஆசை பிடித்த அதிகாரிகள் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள் என தெரிகிறது. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி உயர் பதவியைப் பிடிப்பதே அவர்கள் நோக்கமாக உள்ளது. அதனால்தான் இதுபோன்ற அடக்குமுறைகள் நடக்கிறதோ என சந்தேகிக்க தோன்றுகிறது. ஒரு மருத்துவ கல்லூரியின் பெண் முதல்வர் தான் மிரட்டப்பட்டதுபற்றி சுகாதாரத்துறையிடம் புகாராக சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறது. ஒரு முதல்வருக்கே பணியிடத்தில் ஒரு பாதுகாப்பற்ற சூழல் நிலவும்போது, உயிரிழந்த பெண் டாக்டருக்கும், போராடும் டாக்டர்களுக்கும் எப்படி நீதி கிடைக்கும்? எங்களுக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை என இந்திய மருத்துவ சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.