சென்னை கல்லூரிகளில் நடக்கும் அதிர்ச்சி சம்பவம் | Chennai | College Students Arrest |
சென்னை கல்லூரிகளில் நடக்கும் அதிர்ச்சி சம்பவம் | Chennai | College Students Arrest | செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லுாரியில் வெளிமாநில மாணவர்கள் அதிகம் படிக்கின்றனர். பெற்றோரிடம் கல்லுாரி விடுதியில் தங்குவதாக கூறிவிட்டு சுற்றியுள்ள குடியிருப்புகளில் வாடகை ரூம் எடுத்து தங்குகின்றனர். இந்த மாணவர்களை குறிவைத்து உள்ளூர் ரவுடிகள் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் பகுதிகளை சேர்ந்த ரவுடிகள் கஞ்சா, ஹோக் பவுடர் போதை பொருட்களை சப்ளை செய்கின்றனர். சமீபத்தில் மாணவர்கள் தங்கியிருந்த பகுதியில் போலீஸ் சோதனை நடந்தது. போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 19 மாணவர்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல தமிழகத்தில் பெரும்பாலான கல்லுாரிகளில் வெளிமாநில மாணவர்கள் மூலம் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதன் பின்னணி குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் சொன்ன தகவல் அதிர வைக்கிறது. உள்ளூர் ரவுடிகள் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களை போதை பொருள் விற்பனையாளராக மாற்றுகின்றனர். முதலில் விற்பனை செய்ய முன்வரும் மாணவர்களை போதை பொருளுக்கு அடிமையாக்குகின்றனர். பின்பு அவர்களை மூளைசலவை செய்து பணக்கார மாணவர்களுக்கு போதை விற்பனை செய்து தந்தால் அதிக பணம் கமிஷன் தருவோம் என சொல்கின்றனர். கணிசமான பணம் செலவுக்கு கிடைப்பதால் மாணவர்களும் மறுப்பதில்லை. கல்லூரியில் போதை பொருள் விற்பனை செய்யும் மாணவர்கள் குறித்து சக மாணவர்களுக்கு தெரிந்தாலும் அவர்கள் வெளியில் சொல்வதில்லை. போதை பொருட்கள் மாணவர்களுக்கு பிடித்தமான சாக்லேட், புகையிலை, பவுடர் வடிவில் கிடைப்பதால் அதற்கு எளிதில் அடிமையாகி விடுகின்றனர். இதன் தீவிரத்தை உணர்ந்து இப்போது சென்னையில் போலீஸ் ரெய்டு நடந்தது. மாணவர்கள் செயல்பாட்டில் மாற்றம் இருந்தால் போலீசாருக்கு தெரியப்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களை காட்டிலும் பெற்றோருக்கு தான் அதிக அக்கறை உள்ளது. மாணவர்கள் நடத்தையில் மாற்றம் தெரிந்தால் கண்காணிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.