அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி வெற்றி பெறுமா? ADMK | EPS | OPS | Ex Ministers
லோக்சபா தேர்தலில் 22 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்று அ.தி.மு.க தோல்வி அடைந்த நேரத்தில், பிரிந்தவர்களை சேர்க்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் ஆகியோர் தனி குழுவாகச் சென்று, சேலத்தில் பழனிசாமியை சந்தித்து பேசினர். அவர்களின் முடிவை நிராகரித்த பழனிசாமி, கட்சிக்கு துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வத்தை சேர்க்க முடியாது. ஜானகியை போல சசிகலாவும் அரசியலை விட்டே ஒதுங்க வேண்டியவர். அதை செய்யச் சொல்லுங்கள். இருவர் தொடர்பான விஷயத்தில் இது தான் என் தீர்க்கமான முடிவு. அவர்கள் இருவரையும் எந்த ரூபத்தில் கட்சியில் சேர்த்தாலும், அது கட்சிக்குத்தான் கெடுதல். அப்படியொரு ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொள்ள மாட்டேன் என கூறிவிட்டார். இந்த சந்திப்புக்கு பின், அந்த ஆறு முன்னாள் அமைச்சர்களுடன் பழனிசாமி நெருக்கம் காட்டுவதில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இக்குழுவில் கூடுதலாக 12 பேர் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. அந்த 12 பேரும் மாவட்டச்செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள். இவர்கள், சென்னையில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் நீலாங்கரை வீட்டில் கடந்த வாரம் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர்.