திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாண் புது அறிவிப்பு Pawan Kalyan fasting
திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாண் புது அறிவிப்பு Pawan Kalyan fasting over Tirumala Laddu issue| Jana sena | TTD| Tirumala Prasadam ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க, விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆய்வக முடிவுகளும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியதால் ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதற்கு ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டு 11 நாட்கள் விரதம் இருக்கப்போவதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முந்தைய ஆட்சியாளர்களின் கேடுகெட்ட மனப்போக்கால் புனிதமான ஏழுமலையான் பிரசாத லட்டில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது. எதையும் செய்யும் மனப்பாங்கு கொண்டவர்களால் மட்டுமே இத்தகைய பாவத்தை செய்ய முடியும். லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு இருந்ததை அறிந்த நொடியில் என் மனம் உடைந்தது. கலியுக கடவுளான ஏழுமலையானுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு, சனாதன தர்மத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் பரிகாரம் செய்ய வேண்டும். நாளை காலை, குண்டூர் மாவட்டம் நம்பூரில் உள்ள ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வர சாமி கோயிலில் நான் விரதம் தொடங்க உள்ளேன். 11 நாட்கள் விரதம் இருந்த பிறகு திருமலை சென்று ஏழுமலையானை வழிபடுவேன் கடவுளே... கடந்த ஆட்சியாளர்கள் உனக்கு எதிராக செய்த பாவங்களை கழுவும் சக்தியை எனக்குக் கொடு என மன்றாடுகிறேன். தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்களுக்கு இது பற்றி தெரியாமல் போனதும், அப்படியே தெரிந்தாலும் ஆட்சியாளர்கள் மீதான பயத்தால் வாய் திறக்காமல் போனதும் வேதனை. தர்மத்தை மீட்டெடுக்கும் நேரம் இது என பவன் கல்யாண் கூறியுள்ளார்.