கொல்கத்தா டாக்டர்களுக்கு அதிர்ச்சி தந்த உத்தரவு | Mamata Banerjee | Kolkata Doctor Case
கொல்கத்தா டாக்டர்களுக்கு அதிர்ச்சி தந்த உத்தரவு | Mamata Banerjee | Kolkata Doctor Case கொல்கத்தா அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும் நீதி கேட்டும் கொல்கத்தா மருத்துவமனை ஊழியர்கள், டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். வழக்கு விசாரணை வெளிப்படையாக நடக்க வேண்டும். விசாரணை நடக்கும் போது நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை ஏற்பதாக உறுதி அளித்தார். அதன் பின் டாக்டர்கள் கடந்த 21ம் தேதி பணிக்கு திரும்பினர். கடந்த வாரம் இன்னொரு மருத்துவமனையில் நோயாளியின் குடும்பத்தினர், டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் ஜூனியர் டாக்டர்கள் கடந்த 1ம் தேதியில் இருந்து மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர். கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி வேண்டும். வேலை செய்யும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் கொல்கத்தா அரசு மருத்துவமனையின் சீனியர் டாக்டர்கள் 50 பேர் ராஜினாமா செய்தனர். கொலை செய்யப்பட்ட இளம் பெண் டாக்டருக்காக தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த ராஜினாமா முடிவு எடுத்ததாக அவர்கள் கூறினர். சீனியர் டாக்டர்களின் முடிவை, மருத்துவ மாணவர்கள் வரவேற்றனர். டாக்டர்களின் கோரிக்கைகளில் 90 சதவீதம் அடுத்த மாதம் நிறைவேற்றப்படும். எனவே டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என மேற்கு வங்க தலைமை செயலாளர் மனோஜ் கேட்டுக்கொண்டார். இருந்தும் போராட்டத்தில் இறங்கிய டாக்டர்கள் தங்கள் தரப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். டாக்டர்கள் கூட்டாக ராஜினாமா செய்தது மம்தா தலைமையிலான அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. ராஜினாமாவை ஏற்க மறுத்து மேற்குவங்க தலைமை செயலகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு டாக்டர்கள் கூட்டாக ராஜினாமா செய்தது குறித்து, அரசின் மூத்த ஆலோசகர் ஆலப்பன் பந்த்யோபத்யாய் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்கள் கூட்டு ராஜினாமா சட்டப்படி செல்லாது. ஒவ்வொரு டாக்டரும் தனித்தனியாக, எத்தனை ஆண்டுகள் பணியாற்றி வந்தனர் என்ற விவரத்துடன் ராஜினாமா கடிதத்தை அவரவர் முகவரியுடன் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.