மழை பயத்தால் சென்னையில் நடக்கும் சம்பவங்கள் | Chennai Rain | Red alert
மழை பயத்தால் சென்னையில் நடக்கும் சம்பவங்கள் | Chennai Rain | Red alert சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அரசின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களிடம் பீதியை கிளப்பியுள்ளது. வேளச்சேரி மக்கள் தங்களது கார்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க மேம்பாலங்களில் நிறுத்தினர். கடைகளில் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மழைக்கு முன்பே தாழ்வான பகுதிகளில் வசிப்போர், நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னை மற்றம் புறநகர் மாவட்டங்களில் 40 சென்டி மீட்டர் அளவுக்கு கூட மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை தகவல் சொன்ன மழை அரசு முன்னேற்பாடுகளில் சொதப்பி உள்ளது என்கின்றனர் ஆர்வலர்கள். சாலை பணியால் கூவம் ஆற்றில் கட்டட கழிவு கொட்டப்பட்டிருந்தது. அவை முழுமையாக அகற்றப்படாத நிலை உள்ளது. அதேபோல், மெட்ரோ ரயில் சுரங்கப்பணியால் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியும் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வடிகால் இணைப்பு கொடுக்கவில்லை. மழைநீர் வடிகால் இணைப்பு கொடுக்கபட்ட பகுதிகளில் துார்வாரும் பணியும் முழுமையாக முடிவடையவில்லை. மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையாத இடங்கள், தோண்டப்பட்ட பள்ளங்கள் இரும்பு தகரம் மூலம் மூடப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் கடந்த காலங்களில் வெள்ள பாதிப்பில் சிக்கியவர்கள் நிவாரண முகாம்களில் தங்கிக்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. பருவமழை காலங்களில், இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அரசு மேற்கொள்வது உண்டு. ஆனால் இந்தமுறை 169 நிவாரண முகாம்களை தயார் செய்து, தாழ்வான பகுதி மக்களை, முகாம்களுக்கு அழைத்து உள்ளது. அரசே தாமாக முன்வந்து அழைப்பதால் இந்த நடவடிக்கை வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசித்த மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இப்போது சென்னையில் 990 இடங்களில் மோட்டார்கள், 57 டிராக்டர் பொருத்தப்பட்ட பம்ப் செட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைக்கால பணியில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். சுரங்கப்பாதைகள், தாழ்வான பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே படகும் தயார் நிலையில் உள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டே சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவிகிதம் மேல் முடிந்துவிட்டது என சென்னை மேயர் பிரியா கூறி இருந்தார். சொல்லி ஒரு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்னும் வெள்ளம் தேங்குவது தொடர்கிறது என்கின்றனர் ஆர்வலர்கள்.