வடகொரியா vs அமெரிக்கா... அடுத்த சண்டை ஆரம்பம் | US-South Korean Armies drill | US vs North Korea
வடகொரியா vs அமெரிக்கா... அடுத்த சண்டை ஆரம்பம் | US-South Korean Armies drill | US vs North Korea ரஷ்யா-உக்ரைன் போரை தொடர்ந்து, இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்தது. இப்போது ஹெஸ்புலாவுடனும் இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது. அடுத்ததாக இஸ்ரேலும் ஈரானும் நேரடியாக மோதி வருவதால் அந்நாடுகளும் போரில் குதிக்கும் அபாயம் நிலவுகிறது. இப்படி போர் பதற்றங்களால் உலக அமைதியும் பொருளாதாரமும் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவும் தென்கொரியாவும் சேர்ந்து இன்று போர் ஒத்திகையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடகொரிய எல்லையில் உள்ள ரோட்ரிக்ஸ் பயிற்சி மையத்தில் அமெரிக்க, தென்கொரிய போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் லைவாக குண்டு வீசி பயிற்சியில் ஈடுபட்டன. தன்னை தற்காத்துக்கொள்ளவும், எந்த நேரமும் எதிரிகளுடன் போரிட தயாராக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும் இந்த ஒத்திகையை நடத்தியதாக தென்கொரியா கூறி உள்ளது. அதே நேரம் உக்ரைனுடன் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவுக்கு படைகளை அனுப்பி உதவிய வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக அமெரிக்கா இந்த ஒத்திகையை முன்னின்று நடத்தியதாகவும் தகவல்கள் வருகின்றன. அதாவது, வடகொரியாவும், ரஷ்யாவும் ஜூலை மாதம் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. ரஷ்யாவுக்கு எதாவது பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றால் வடகொரியா ராணுவ உதவி வழங்க வேண்டும்; அதே போல் வடகொரியாவுக்கு ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்தால் ரஷ்யா தனது படையை அனுப்பி உதவ வேண்டும். இது தான் அந்த ஒப்பந்தம். உக்ரைன் போரை சமாளிப்பதற்காக ரஷ்யா எடுத்த அஸ்திரங்களுள் இந்த ஒப்பந்தமும் ஒன்று. அதாவது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ தான் உக்ரைனுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகிறது. நேட்டோ அமைப்புக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் வடகொரியாவுடன் ஒப்பந்தம் செய்தது ரஷ்யா. ஒப்பந்தம் கையெழுத்தானதுமே பல ஆயிரம் வீரர்களை ரஷ்யாவுக்கு வடகொரியா அனுப்ப போகிறது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சொல்லி இருந்தார். அவர் கணித்தது போலவே ரஷ்யாவுக்கு வீரர்களை அனுப்ப வடகொரியா முன்வந்தது. முதல் கட்டமாக 1500 வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியது. அடுத்த கட்டமாக மேலும் 1500 பேரை சில நாட்கள் முன்பு அனுப்பியது. டிசம்பருக்குள் 10 ஆயிரம் வீரர்களையும் ஜனவரிக்குள் 12 ஆயிரம் வீரர்களையும் ரஷ்யாவுக்கு அனுப்ப வடகொரியா திட்டமிட்டுள்ளது. வடகொரிய வீரர்கள் ரஷ்ய வீரர்களுடன் சேர்ந்து பயிற்சி பெறுவார்கள். பின்னர் எல்லைக்கு போய் உக்ரைனுடன் சண்டை செய்வார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியானது. ரஷ்யா சென்ற 3 ஆயிரம் வீரர்களும் ரஷ்யாவில் பயிற்சி பெற்று வருவதை அமெரிக்கா உறுதி செய்தது. ஏற்கனவே ரஷ்யாவுக்கு ராக்கெட் குண்டு, ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் வடகொரியா வழங்கி இருக்கிறது. இப்படி உக்ரைன் போரில் ரஷ்யாவுடன் வடகொரியா இணைந்து செயல்படுவதை தடுக்க தான் அந்நாட்டின் எல்லையில் தென்கொரியாவுடன் சேர்ந்து அமெரிக்கா போர் ஒத்திகை நடத்தியது என்று இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.