இஸ்ரேலை ஈரான் தொட்டால் என்னாகும்? திடுக் ரிப்போர்ட் | Israel vs Iran | Israel attacks Iran | IDF
இஸ்ரேலை ஈரான் தொட்டால் என்னாகும்? திடுக் ரிப்போர்ட் | Israel vs Iran | Israel attacks Iran | IDF இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே நடந்து வரும் தீவிர போர், இப்போது இஸ்ரேல், ஈரான் இடையேயான நேரடி போராக வெடிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. போரின் முக்கிய ஆப்ரேஷனாக ஹமாஸ், ஹெஸ்புலா பயங்கரவாத அமைப்புகளின் உச்ச தலைவர்கள் இஸ்மாயில் ஹனியே, ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் குண்டு வீசி கொன்றது. இதை தாங்கிக்கொள்ள முடியாத ஈரான் அக்டோபர் 1ம் தேதி இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை குண்டுகளை வீசியது. ஒரே நேரத்தில் சக்திவாய்ந்த 200 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது வீசப்பட்டன. நேவாடியம் விமானப்படை தளம் சேதம் அடைந்தது. ஒருவர் கொல்லப்பட்டார். ஈரானுக்கு பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்த இஸ்ரேல், சொன்னது போல் அக்டோபர் 26ம் பதில் தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில் இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் ஈரானுக்குள் புகுந்து வேட்டையாடின. ராணுவ தளங்கள், ஏவுகணை உற்பத்தி ஆலைகள், ஏவுகணை ஏவுதளங்கள், ட்ரோன் ஏவுதளங்களை குறி வைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் லேசான சேதம் ஏற்பட்டது. 4 வீரர்கள் பலியாகினர். வேறு எதுவும் நடக்கவில்லை என்று ஈரான் சொன்னது. ஆனால் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானுக்கு பெருத்த அடி விழுந்தது. அதன் ஏவுகணை தயாரிப்பு ஆலைகள் கடும் சேதம் அடைந்தன. குறிப்பாக, ஏவுகணை தயாரிப்புக்கு தேவைப்படும் எரிபொருள் மற்றும் மூலப்பொருட்களை இஸ்ரேல் பெரிய அளவில் அழித்து விட்டது. மீண்டும் பழைய நிலைமைக்கு அந்த ஆலைகள் திரும்ப வேண்டும் என்றால் குறைந்தது ஓராண்டாவது தேவைப்படும் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன. அதே போல் ஈரான் கைவிட்ட அணு உற்பத்தி மையம் ஒன்றும் கடுமையாக சேதம் அடைந்து இருப்பதை சாட்டிலைட் புகைப்படங்கள் சுட்டிக்காட்டின. பதிலுக்கு பதில் தாக்குதல் முடிந்து விட்டதால் இஸ்ரேல், ஈரான் பிரச்னை அடுத்த கட்டத்துக்கு போகாது என்று உலக நாடுகள் கருதின. ஆனால் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்போம் என்று ஈரான் தடாலடியாக அறிவித்தது. ஈரான் தாக்குதல் நடத்தினால் நாங்களும் சும்மா இருக்கமாட்டோம் என்று இஸ்ரேல் சூளுரைத்தது. எங்கள் கையில் ஈரானின் பல இலக்குகள் உள்ளன. இனி கொடுக்கும் அடி அக்டோபர் 26 தாக்குதல் மாதிரி இருக்காது என்று இஸ்ரேலும் எச்சரிக்கை விடுத்தது. இஸ்ரேல் மீது இனி தாக்குதல் நடத்தக்கூடாது என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஈரானை வலியுறுத்தின. ஆனால் ஈரான் கேட்பதாக இல்லை. இஸ்ரேலுக்கும் அதற்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்காவுக்கும் நிச்சயம் ஈரான் பதிலடி கொடுக்கும் என்று அந்த நாட்டின் உச்ச தலைவர் கமெனி பகிரங்கமாக அறிவித்தார். இந்த முறை கொடுக்கும் அடி இஸ்ரேலால் ஒரு போதும் மறக்கவே முடியாத அளவுக்கு தீவிரமாக இருக்க வேண்டும் என்று ஈரான் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க தேர்தல் நடக்கும் 5ம் தேதிக்கு பிறகு ஈரான் தாக்குதல் நடத்தாது. அதற்கு முன்பே எல்லாம் முடிந்து விடும் என்று ஈரானை சேர்ந்த உயர் அதிகாரிகள் சிலர் கூறி இருக்கின்றனர். எனவே எந்த நேரமும் இஸ்ரேல் தாக்கப்படும் அபாயம் நீடிக்கிறது. இந்த நிலையில் ஈரான் உச்ச தலைவர் கமெனி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி அமெரிக்க உயர் அதிகாரி கூறியதாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஈரானை தொடர்பு கொண்டு இஸ்ரேல் மீது இனி தாக்குதல் நடத்தக்கூடாது என்று சொல்லி இருக்கிறோம். இனி இஸ்ரேலை அடித்தால், அவர்கள் ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்துவார்கள். இனி இஸ்ரேலை அமெரிக்காவால் தடுத்து நிறுத்த முடியாது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்கும் நிலை வந்தால் அது பழைய தாக்குதல் போல் இருக்காது. இது போதும் என்று வரம்பு நிர்ணயித்தெல்லாம் இனி இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என்று நேரடியாக ஈரானை எச்சரித்துள்ளோம் என்று அமெரிக்க அதிகாரி கூறி உள்ளார். எனவே இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அது புதிய போருக்கு முன்னுரை எழுதும் என்பதில் சந்தேகம் இல்லை என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.