சென்னை பள்ளியில் தொடரும் மர்மம்: நடந்தது என்ன? suspected gas leak chennai
சென்னை பள்ளியில் தொடரும் மர்மம்: நடந்தது என்ன? suspected gas leak chennai Tiruvottriyur school 40 Students fainted Tamil Nadu Pollution Control Board education department சென்னை திருவொற்றியூரில் விக்டரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. 1400 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். கடந்த மாதம் 25-ம்தேதி பள்ளியின் 3வது தளத்தில் வாயு கசிவு ஏற்பட்டு 35 மாணவிகளுக்கு மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு, அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, பள்ளி மூடப்பட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்தனர். வாயுக்கசிவு போன்ற பெரிய பிரச்னை இல்லை என வாரிய அதிகாரிகள் கூறியதால், கடந்த 4ம்தேதி பள்ளி திறக்கப்பட்டது. அப்போதும் பள்ளியில் வாயுக்கசிவு ஏற்பட்டு, 8 மாணவிகள் மயங்கினர். மறுபடியும் பள்ளி மூடப்பட்டது. பள்ளியில் என்ன பிரச்னை என்பது பற்றி அதிகாரிகளோ பள்ளி நிர்வாகமோ வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார்கள் என பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, திருவொற்றியூரில் உள்ள மண்டல குழு அலுவலகத்தில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் இப்ராகிம் தலைமையில் கூட்டம் நடந்தது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கசிந்தது விஷவாயுதானா? அரசு தரப்பில் யாரும் விளக்கம் அளிக்காதது ஏன்? என அதிகாரிகளிடம் பெற்றோர்கள் காரசாரமாக கேட்டனர். பள்ளி கட்டடத்தின் மொட்டை மாடியில் 35 முயல்களை பள்ளி நிர்வாகிகள் வளர்த்துள்ளனர்; அதன் எச்சத்தால் துர்நாற்றம் வீசியிருக்கலாம்; அதை சுவாசித்த மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்; மற்றபடி விஷவாயு கசிந்ததா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது; அதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் கூறினர். பள்ளி மாடியில் இருந்து 35 முயல்களும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன: பரீட்சை நெருங்குவதால், 10,11, 12ம் வகுப்புகள் மட்டும் நாளை முதல் இயங்கும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக, கோட்டாட்சியர் இப்ராகிம் தெரிவித்தார். அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் பங்கேற்ற பெற்றோர்கள் பத்திரிகையாளர்களிடம் வாய் திறக்கவில்லை. மீடியாக்களிடம் பேசக்கூடாது என அதிகாரிகள் கூறியிருப்பதாக, சில பெற்றோர்கள் கூறினர். ஆனால், உண்மையிலேயே என்ன நடந்தது? விஷவாயு கசிந்ததா? அல்லது முயல்களால் வந்த பிரச்னையா? என எதையுமே அதிகாரிகள் உறுதியாக கூறவில்லை. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப இப்பவும் கூட பயமாகத்தான் இருக்கிறது; பாதியில் பிள்ளைகளை வேறு பள்ளிக்கு மாற்ற முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் அனுப்புகிறோம் என பெற்றோர்கள் கவலையுடன் கூறினர்.