இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க பல்கலைகள் அட்வைஸ் Trump| America | President| Foreign Students|
இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க பல்கலைகள் அட்வைஸ் Trump| America | President| Foreign Students| 2024 நவம்பரில் நடந்த அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். ஜனவரி 20ம் தேதி அவர் அதிபராக பதவி ஏற்க உள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் ஓட்டுப் போடுபவர்களுக்கு பல வாக்குறுதிகள் தந்தார். மீண்டும் அதிபரானால் அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களை திருப்பி அனுப்பும் பணிகள் நடக்கும். அதற்காக ராணுவ உதவியும் கேட்பேன் என டிரம்ப் கூறினார். அமெரிக்காவில் லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்தார். ஜனவரி 20ம்தேதி, அதிபராக டிரம்ப் பதவி ஏற்றவுடன் அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல பொருளாதார கொள்கைகள், விசா நடைமுறைகள், முறைகேடாக அமெரிக்காவில் தங்கி இருப்பவர்களை வெளியேற்றுவது, குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை அமெரிக்கா வர தடை விதிப்பது, கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறையில் மாற்றம் கொண்டு வருவது போன்றவற்றிலும் டிரம்ப் முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களும், வெளிநாட்டு பணியாளர்களும் கலக்கத்தில் உள்ளனர். டிரம்ப் பதவி ஏற்பதற்கு முன்பு, வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா வந்துவிடும்படி, அந்நாட்டு பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கின்றன. ஒருவேளை மாணவர்களுக்கான விசா விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டால், விடுமுறைக்கு தாயகம் சென்றுள்ள மாணவர்கள் மீண்டும் தூதரகங்களில் விசாவுக்காக விண்ணப்பம் செய்து அமெரிக்கா வந்து சேர தாமதமாகலாம்; அந்த சிரமங்களை தவிர்க்கவே டிரம்ப் பதவி ஏற்கும் முன் அமெரிக்காவுக்கு திரும்பி வந்து விடும்படி மாணவர்களை கல்வி நிறுவனங்கள் அழைத்துள்ளன. உயர் கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா சிறந்த இடமாக இருக்கிறது. 3 லட்சத்து 31 ஆயிரத்து 602 இந்திய மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படிக்கின்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது 23 சதவீதம் அதிகம். இதற்கு முன் சீன மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் அமெரிக்க கல்வி நிலையங்களில் படித்தனர். அவர்களை விஞ்சி இந்திய மாணவர்கள் அதிக அளவு அமெரிக்க உயர் கல்வி நிலையங்களில் படித்து வருகின்றனர். அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் மொத்தமாக 54 சதவீதம் பேர் இந்தியர்கள் மற்றும் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.