உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளக்காடான வட மாவட்டங்கள் | Cyclone Fengal

கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளக்காடான வட மாவட்டங்கள் | Cyclone Fengal

கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளக்காடான வட மாவட்டங்கள் | Cyclone Fengal | Heavy rain | North Districts | Heavy affect | Flood பெஞ்சல் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, கடலோர பகுதிகளில் கவனம் செலுத்திய அரசு, உள்மாவட்டங்களை பெரிதாக கணக்கில் கொள்ளாமல் விட்டுவிட்டது. புயல் கரையை கடந்த புதுச்சேரி, அருகில் உள்ள கடலூர், விழுப்புரம் மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. யாரும் எதிர்பாராத வகையில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீர் கரைகளை உடைத்துக் கொண்டு ஊருக்குள் புகுந்ததால், இதுவரை இல்லாத அளவுக்கு வடமாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. சாத்தனுார் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், திருக்கோவிலுார் அணைக்கட்டு வந்தடைந்தது. தொடர்ந்து, மலட்டாற்றில் திடீரென வினாடிக்கு 10,000 கன அடிக்கு மேல் நீர் வரத்து அதிகரித்தது. திருவெண்ணெய்நல்லுார், டி.எடையார், தொட்டிக்குடிசை, கண்ணாரம்பட்டு, தென்மங்கலம், அரசூர், பாரதிநகர், இருவேல்பட்டு பகுதிகளில் ஆற்றோர வீடுகள், விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. மலட்டாற்றின் குறுக்கே உள்ள சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து துண்டானது. தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கங்கணாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு உட்பட 25 கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. கடலுார் - புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விட்டனர். தென்பெண்ணை கரையோரம் உள்ள புதுச்சேரி பகுதிகளான இருளஞ்சந்தை, குருவிநத்தம், பாகூர், கொம்மந்தான்மேடு, ஆராய்ச்சிக்குப்பம், சோரியாங்குப்பம் கிராமங்களில், வெள்ள நீர் புகுந்தது. 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பாகூரில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் சாலை துண்டிக்கப்பட்டு தீவுகளாக மாறின. சேலம், ஏற்காட்டில் 4 நாட்களாக மழை பெய்கிறது. புத்துாரில் இருந்து, புளியங்கடை செல்லும் வழியில் இருந்த 20 அடி பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 40 அடி பாலம் அருகில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரிய பாறை உருண்டு சாலையில் விழுந்தது. மரங்களும் முறிந்து விழுந்தன. 20 இடங்களில் சிறு கற்கள், பாறைகள், மண் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தர்மபுரியில் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில் உள்ள அணையில் இருந்து திறந்து விட்ட 3,750 கன அடி நீரால், அரூர் வாணியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. கரையோர வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் 50 குடும்பத்தினர் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். வத்தல் மலை அடிவாரத்தில் இருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. சாலை துண்டிப்பால் 10 கிராம மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாத்தனுார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், பெண்ணையாற்றில் நீர் திறந்து விடப்பட்டது. அதனால், கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் வீடுகளை நீர் மூழ்கடித்தது. 30 வீடுகள் அடித்து செல்லப்பட்டன. முன்னறிவிப்பின்றி நள்ளிரவில் தண்ணீர் திறந்து விட்டதாக மக்கள் குற்றம் சாட்டி மறியல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நவம்பர் 30 மதியம் முதல் மிதமான மழை பெய்து வந்தது. டிசம்பர் 1ல் மழை அதிகரித்து, தமிழகத்தில் அதிகபட்சமாக ஊத்தங்கரையில் 50.3 செ.மீ., அளவில் மழை பதிவானது. ஊத்தங்கரை சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி, ஊத்தங்கரை அண்ணா நகர், காமராஜர் நகர் குடியிருப்புகளுக்குள் உபரி நீர் புகுந்தது. திருப்பத்துார் சாலையிலுள்ள பரசனேரி ஏரி நிரம்பியதால், உபரி நீர் காட்டாற்று வெள்ளம் போல பஸ் ஸ்டாண்ட் பின்புறம் நிறுத்தி இருந்த 40 கார், வேன்களை அடித்து சென்றது. அவற்றை பொக்லைன் மூலம், கயிறு கட்டி மீட்கும் பணியில், பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். போச்சம்பள்ளி சுற்றுவட்டாரத்தில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி, சாலைகள், வணிக வளாகம், போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் வளாகத்தில் நீர் புகுந்தது. அனைத்து சாலைகளும் துண்டிக்கப்பட்டன. காவேரிப்பட்டணம் பாலேகுறி ஏரி நிரம்பி, குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. கிருஷ்ணகிரி நகராட்சி பகுதிகளிலும் வீடுகளில் மழைநீர் புகுந்தது.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி