சிரியா அதிபரையே காலி செய்த கிளர்ச்சி படை? பகீர் தகவல் syria update | Bashar Al Assad
சிரியா அதிபரையே காலி செய்த கிளர்ச்சி படை? பகீர் தகவல் syria update | Bashar Al Assad | syria rebels மேற்காசிய நாடான சிரியாவின் அதிபராக இரண்டாயிரமாவது ஆண்டு ஜூலை மாதம் அரியணை ஏறியவர் பஷர் அல் ஆசாத். இவரது ஆட்சிக்கு எதிராக 2011ம் ஆண்டில் உள் நாட்டு போர் வெடித்தது. அரசுக்கு எதிராக இஸ்லாமிய கிளர்ச்சி படையினர் தீவிர போரில் ஈடுபட்டனர். குறிப்பாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பினரும் அமெரிக்க தயவில் செயல்பட்ட குர்திஷ் அமைப்பும் உள்நோட்டு போரை முன் நின்று நடத்தின. 2014, 2015ல் உச்சக்கட்ட போர் நடந்தது. முக்கியமான 2 நகரங்களை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். அதிபர் ஆசாத்தை வீழ்த்தி மொத்த ஆட்சியையும் கைப்பற்றும் நிலைமை ஏற்பட்டது. ஆனால், ரஷ்யா மற்றும் ஈரான் நேரடியாக வழங்கிய ராணுவ உதவி மூலம் கிளர்ச்சியாளர்களை வீழ்த்தியது சிரியா அரசு. பலத்த சேதத்தை எதிர்கொண்ட கிளர்ச்சியாளர்கள் சண்டையில் இருந்து பின் வாங்கினர். அதன் பிறகு தீவிர போர் இல்லை. சரியான நேரத்துக்காக காத்திருந்த ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சி படை சில வாரம் முன்பு மீண்டும் தீவிர போரை ஆரம்பித்தது. சிரியாவுக்கு உதவிய ரஷ்யா, ஈரான், ஹெஸ்புலா வராது. உக்ரைன் போரில் ரஷ்யா பிஸியாகிவிட்டது. போரில் இஸ்ரேல் கொடுத்த அடியில் ஹெஸ்புலா சோர்ந்து விட்டது. ஈரானுக்கோ ஏற்கனவே இஸ்ரேலுடன் இழுத்த பஞ்சாயத்தே இன்னும் முடியவில்லை. எனவே தான் இந்த நேரத்தை கிளர்ச்சி படையினர் தேர்வு செய்தனர். அதற்கு கை மேல் பலனும் கிடைத்தது. வெறும் இரண்டே வாரத்தில் அடுத்தடுத்து முக்கிய நகரங்களை கைப்பற்றினர். உலகின் மிகவும் பழமையான நகரங்களின் ஒன்றான சிரிய தலைநகர் டமாஸ்கசை நோக்கி நேற்று முன்தினம் முதல் வேகமாக முன்னேறிய கிளர்ச்சி படை, இன்று டமாஸ்கசையும் கைப்பற்றியதாக அறிவித்து விட்டனர். இதன் மூலம் சிரியாவின் ஆட்சி கிளர்ச்சியாளர்கள் வசம் போய் விட்டது. இதை அந்நாட்டின் பிரதமரும் ஒப்புக்கொள்ளும் விதமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மக்களுக்கும், அரசு சொத்துக்கும் எவ்வித சேதமும் ஏற்படக்கூடாது. ஆட்சியை கிளர்ச்சி படை வசம் ஒப்படைக்க தயார் என்று அறிவித்துள்ளார். இப்படியொரு பரபரப்பான சூழலில் கால் நூற்றாண்டாய் ஆட்சி செய்து வந்த அதிபர் பஷர் அல் ஆசாத் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவர் தப்பி ஓடி விட்டார் என்று கிளர்ச்சி படையினர் அறிவித்தனர். ஆனால் அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி திடுக்கிட வைத்துள்ளது. கிளர்ச்சி படை டமாஸ்கசை நெருங்கும் போது சில நாடுகளிடம் தஞ்சம் புக ஆசாத் உதவி கோரினார். இறுதியாக டமாஸ்கஸ் விமான நிலையத்தில் இருந்து அவர் அவசர அவசரமாக புறப்பட்டு சென்றார். அப்போது தான் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். அதாவது, டமாஸ்கஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிரியன் ஏர் விமானம் ஒன்று திடீரென ராடாரில் இருந்து காணாமல் போனது. சிரிய கடற்கரையை நோக்கி பறந்த அந்த விமானம் திடீரென எதிர் திசையில் திரும்பி பறந்தது. அந்த விமானத்தில் தான் அதிபர் ஆசாத் இருந்திருக்க வேண்டும். மூன்றரை கிலோ மீட்டர் உயரத்தில் பறந்த அந்த விமானம் திடீரென, ஒரு கிலோ மீட்டர் உயரத்துக்கு தாழ்ந்து வந்தது. அடுத்த சில வினாடிகளில் ராடாரில் இருந்து அந்த விமானம் மறைந்தது. ஒன்று எந்திர கோளாறால் விழுந்திருக்க வேண்டும். அல்லது, கிளர்ச்சி படையினர் சுட்டு வீழ்த்தி இருக்க வேண்டும் என்று தகவல் பரவி வருகிறது. சிரிய அதிபர் இருந்ததாக கருதப்படும் விமானம் ரஷ்யாவின் விமான படை தளம் ஒன்றை நோக்கி பறந்ததாகவும், அதை கிளர்ச்சி படையினர் சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ஆசாத் கதி என்ன என்பது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அவர் விமான விபத்தில் இறந்தாரா? கிளர்ச்சி படையால் கொல்லப்பட்டாரா? அல்லது பாதுகாப்பான நாட்டில் தஞ்சம் புகுந்தாரா என்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.