பொய்களை முளையிலேயே கிள்ளி எறிய அறிவுறுத்தல்! | Misuse Anti Dowry Law | Matrimonial Conflicts | Supre
பொய்களை முளையிலேயே கிள்ளி எறிய அறிவுறுத்தல்! | Misuse Anti Dowry Law | Matrimonial Conflicts | Supreme Court தெலங்கானாவை சேர்ந்த லட்சுமி நாராயணா சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், என் மீதும், என் குடும்பத்தார் மீதும் என் மனைவி குடும்ப வன்முறை புகார்களை கூறியுள்ளார். பழிவாங்கும் நோக்கோடு பொய் புகார்களை கொடுத்துள்ளார். இது எங்களுக்கு அவமானத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது என கூறியிருந்தார். மனைவியின் புகார்களை ரத்து செய்ய ஹைதராபாத் ஐகோர்ட்டில் அவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனதால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருந்தார். புதனதன்று நீதிபதிகள் நாகரத்தினா, கோட்டீஸ்வர் சிங் விசாரித்தனர். அவருடைய மனுவை ஏற்று, மனைவியின் புகார்களை தள்ளுபடி செய்தனர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது: பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து காப்பாற்றும் நோக்கத்துடன் இந்திய தண்டனை சட்டத்தின் 498ஏ பிரிவு கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை பயன்படுத்தி கணவர் மீதும் அவருடைய குடும்பத்தார் மீதும் பெண்கள் புகார் கொடுப்பது அதிகரித்துள்ளது. கொடுமைக்கு ஆளாகும்போது பெண்கள் புகார் கொடுக்கக் கூடாது என்று கூறவில்லை. சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது என்றே கூறுகிறோம். திருமண உறவில் பிரச்னை ஏற்படும்போது, கணவர் மீதும், அவரது குடும்பத்தார் மீதும் பொய்யான புகார்களை கூறுவது தடுக்கப்பட வேண்டும். குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் என்பது பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு கேடயம். அதையே ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. ஆனால் அந்த போக்கு நாடு முழுதும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. ஆதாரம் இல்லாத, சாட்சியங்கள் இல்லாத பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், நீதிபதிகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நீக்க வேண்டும். முலையிலேயே கிள்ளி எறிவது நேர்மையான, விரைவான நீதி கிடைக்க உதவும். தேவைப்பட்டால் இந்த சட்டத்தின் பிரிவுகளை மறுஆய்வு செய்யலாம் என நீதிபதிகள் கூறினர். பெங்களூரு இளைஞர் ஒருவர் இது தொடர்பான வழக்கில் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பாக விவாதிக்கப்படும் நேரத்தில் சுப்ரீம் கோர்ட் விடுத்துள்ள எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.