தூத்துக்குடி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்த கனமழை வெள்ளம் | Heavy Rain | Flood | Tuticorin
துாத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 17, 18ம் தேதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் அம்மாவட்டத்தையே புரட்டி போட்டது. 52 பேர் இறந்தனர். ஏராளமானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவித்தனர். தூத்துக்குடி மக்களின் இயல்பு வாழ்க்கையே முடங்கிப்போனது. பாதிப்பில் இருந்து மக்கள் ஓரளவுக்கு மீண்டு வந்த நிலையில், ஓராண்டு முடியும் சமயத்தில் அதே போல மற்றொரு மழை பாதிப்பை தூத்துக்குடி மக்கள் சந்தித்துள்ளனர். இருந்தாலும், மக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இறப்புகளும், பொருட்சேதங்களும் அதிகம் இல்லை. கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்தது. அதேபோன்று இப்போதும் மழைநீர் சூழ்ந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பணியில் இருந்த ஊழியர்கள், பத்திரமாக மீட்கப்பட்டனர். நெல்லை - - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மங்களகிரி விலக்கு பகுதியில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து தடைபட்டது. குறைந்த அளவு மழை பெய்தாலே பாதிப்பு ஏற்படும் நிலையில்தான் துாத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகமும் உள்ளது. கடந்த ஆண்டு இங்கு மழைநீர் புகுந்ததில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்தன.