ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் கோரிக்கை | Bangladesh requests India to send Sheikh Hasina back
ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் கோரிக்கை | Bangladesh requests India to send Sheikh Hasina back வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான மாணவர்களின் போராட்டத்தால் நாடே பற்றி எரிந்தது. மாணவர் அமைப்பினர், மக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. 600க்கும் அதிகமானோர் இறந்தனர். பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியை இழந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். சில நாட்களில் பதட்டம் தணிந்து இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். ஹசீனா வெளியேறி 4 மாதங்கள் ஆகிறது. ஹசீனா அரசுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என வழக்கு பதிவாகி அந்நாட்டு தலைநகர் டாக்காவில் உள்ள கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. ஹசீனா அவரது அமைச்சர்கள், ஆலோசகர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப இந்திய தூதரகத்திற்கு வங்கதேச இடைக்கால அரசு கடிதம் அனுப்பியுள்ளது. நீதித்துறை நடவடிக்கைக்காக, ஹசீனாவை திரும்ப அழைக்க விரும்புவதாக, இந்திய அரசிற்கு வாய்மொழியாக கோரிக்கை வைத்துள்ளோம் என தற்போதுள்ள வெளியுறவு அமைச்சர் தவுகித் ஹூசைன் கூறி உள்ளார். ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி வங்கதேசத்தின் இடைக்கால அரசு பலமுறை கோரிக்கை வைத்து வருகிறது. இந்த முடிவு தொடர்பாக இந்தியா இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.