மாணவி வழக்கை விசாரிக்க சென்னை வரும் தேசிய மகளிர் ஆணைய அதிகாரிகள் | Anna University
மாணவி வழக்கை விசாரிக்க சென்னை வரும் தேசிய மகளிர் ஆணைய அதிகாரிகள் | Anna University அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறை மாநிலத்தை உலுக்கி உள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்துள்ளது. இது தவிர பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதுடன், கட்டணம் எதுவும் இன்றி, மாணவி தன் படிப்பை தொடர்ந்து முடிக்க அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. விசாரணை நடத்த 2 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரகத்கர் உத்தரவிட்டுள்ளார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் ஷிவானிடே இந்த குழுவில் இடம்பெற்று உள்ளனர். இருவரும் நாளை சென்னை வர உள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி, கல்லூரி மாணவர்கள், வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் உள்பட வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.