டில்லியில் பகீர் கிளப்பிய சிஏஜி delhi sheesh mahal row | delhi cm house | BJP vs AAP | Modi vs Kejri
டில்லியில் பகீர் கிளப்பிய சிஏஜி delhi sheesh mahal row | delhi cm house | BJP vs AAP | Modi vs Kejri டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் முதல்வராக இருந்தபோது, டில்லியின் கொடிமரச் சாலையில் உள்ள முதல்வருக்கான அரசு இல்லம் புனரமைக்கப்பட்டது. பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது, ஏற்கனவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், டில்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கிடையே டில்லி முதல்வர் வீடு புனரமைப்பில் பல மோசடிகள் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த அறிக்கை இன்னும் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால், அதன் விவரங்கள் இப்போது வெளியாகி உள்ளன. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வரின் இல்லத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக டில்லி அரசின் பொதுப்பணித் துறை அமைச்சர், 2020 மார்ச் 17ல் ஒரு திட்டத்தை தாக்கல் செய்தார். அதில், கீழ்தளத்தில் உள்ள வீட்டை புனரமைப்பதுடன், கூடுதலாக ஒரு தளம் கட்ட பரிந்துரைக்கப்பட்டது. இதற்கிடையே, 2020 ஜூலை 27ம் தேதி, பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர், ஏற்கனவே உள்ள வீட்டை இடித்து புதிதாக வீடு கட்டலாம் என்று கூறியுள்ளார். அதற்கு அடுத்த நாளே, இந்த திட்டத்துக்கு அமைச்சர், பொதுப் பணித் துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. உடனடியாக, வீடு கட்டுவது தொடர்பாக ஆலோசனை வழங்க, ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். எவ்வித நடைமுறைகளையும் பின்பற்றாமல், அனைத்தும் வேகவேகமாக நடந்துள்ளன. முதல்வரின் வீட்டை புனரமைப்பது தொடர்பாக முதலில் ஒரு மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. ஆனால், அதுவே, நான்கு முறை மாற்றப்பட்டுள்ளது. இதில் இருந்து, என்ன செய்யப்போகிறோம் என்ற தெளிவில்லாமல், நினைத்த நேரத்தில் ஒவ்வொரு மாறுதல்களாக செய்துள்ளனர். இதைத் தவிர, முதலில் தாக்கல் செய்ய திட்ட மதிப்பீட்டில் இல்லாத பல பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கு முறையான ஒப்புதல் பெறவில்லை. இந்த வகையில், 7.61 கோடி ரூபாய்க்கு முதலில் திட்டமிட்டு, 33.66 கோடி ரூபாய்க்கு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இது திட்ட மதிப்பீட்டை விட 342 சதவீதம் அதிகமாகும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாஜ, ஆம் ஆத்மி இடையே இந்த விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் அரசியல் மோதல் நடந்து வரும் நிலையில், இந்த தகவல் ஆம் ஆத்மிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.