புடின்-டிரம்ப் சந்தித்ததும் என்ன நடக்கும்? பரபரப்பு தகவல் | Trump meets Putin | Russia vs Ukraine
புடின்-டிரம்ப் சந்தித்ததும் என்ன நடக்கும்? பரபரப்பு தகவல் | Trump meets Putin | Russia vs Ukraine உக்ரைன், ரஷ்யா போர் தீவிரமாக நடந்து வருகிறது. உக்ரைனின் 10 முதல் 12 சதவீதம் பகுதியை ரஷ்யா கைப்பற்றி இருக்கிறது. அதே நேரம் ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தின் ஒரு பகுதியை உக்ரைன் ராணுவம் கைப்பற்றி உள்ளது. இரு நாடுகளும் இழந்த பகுதியை மீட்க இப்போது உச்சக்கட்ட மோதலில் ஈடுபட்டு வருகின்றன. வடகொரிய வீரர்கள் உதவியுடன் ரஷ்யாவும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைனும் மாறி, மாறி குண்டு வீசி தாக்குகின்றன. இப்படியொரு பரபரப்பான சூழலில் தான் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். தேர்தலில் போட்டியிடும் போதே, நான் அதிபர் ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் உக்ரைன் மீதான ரஷ்ய போரை நிறுத்துவேன் என்று சொல்லி இருந்தார். தேர்தலில் அவர் வெற்றி பெற்றதால் போர் நிறுத்தம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. டிரம்ப் வெற்றிக்கு வாழ்த்து சொன்ன புடின், அவர் உறுதியான மனிதன் என்று புகழ்ந்து பேசினார். இன்னொரு புறம், அதிபர் தேர்தலில் வென்றதும், டிரம்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போன் செய்து பேசினார். போரை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். டிரம்பும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதற்கிடையே டிரம்ப், புடின் சந்திப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகரிக்க ஆரம்பித்தது. இதை உறுதி செய்வது போல் இரு தலைவர்களும் பேசி வந்தனர். இந்த நிலையில் தான் உக்ரைன் போர் பற்றிய கேள்விக்கு, டிரம்ப் முக்கியமான பதிலை சொன்னார். புடின் என்னை சந்திக்க விரும்புகிறார். இதை பொதுவெளியிலேயே பல முறை கூறி உள்ளார். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம். ரத்த தெறிக்கும் இந்த போர் அவசியமற்றது என்று டிரம்ப் சொன்னார். இப்போது டிரம்ப் கருத்துக்கு ரஷ்யாவும் பதில் அளித்துள்ளது. இது பற்றி ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட செய்தி: அமெரிக்க அதிபராகும் டிரம்பை சந்திக்க புடின் எப்போதும் தயாராகவே உள்ளார். டிரம்ப் உட்பட எந்த சர்வதேச தலைவரையும் சந்திக்க புடின் தயாராக இருப்பதை ஏற்கனவே சொல்லி இருக்கிறார். பேச்சு வார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற டிரம்பின் முடிவு வரவேற்க கூடியது. டிரம்பை சந்திக்க புடின் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இது பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற பரஸ்பர மற்றும் அரசியல் விருப்பம் ஆகும் என்று ரஷ்யா கூறி உள்ளது. எனவே டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற பிறகு எந்த கணமும் டிரம்ப், புடின் சந்திப்பு நடக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் எடுத்த முடிவால் தான் இஸ்ரேல், ஹெஸ்புலா இடையே போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. எனவே ரஷ்யா போரையும் டிரம்ப் நிறுத்துவார் என்று தீர்க்கமாக நம்புகிறது உக்ரைன். தனது அரசாங்கத்தில் உக்ரைன், ரஷ்யாவுக்கான சிறப்பு தூதராக கீத் கெல்லாக் என்பவரை டிரம்ப் நியமித்துள்ளார். இவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், அமெரிக்க ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாகவும் இருந்தவர்.