துயர சம்பவத்துக்கு பின் திரிவேணி சங்கமம் செல்வாரா?
உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் மஹா கும்பமேளா நெரிசலில், 30க்கு மேற்பட்டோர் இறந்தனர். மவுனி அமாவாசையன்று அதிகாலை 2 மணிக்கு இச்சம்பவம் நடந்தது. விஷயம் அறிந்த பிரதமர் மோடி, அதிகாலை 4 மணிக்குள் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் 4 முறை போனில் பேசி விவரங்கள் கேட்டு இருக்கிறாராம். எந்த பிரச்னையும் இல்லாமல் கும்பமேளாவை நடத்த வேண்டும் என்று பல மாதங்களாக திட்டமிட்டு, நன்றாக போய்க்கொண்டு இருந்த நிலையில், பக்தர்கள் இறந்தது மோடியை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 1954ல் நடந்த மகா கும்பமேளாவில் அப்போதைய பிரதமர் நேரு, திருவேணி சங்கமத்தில் நீராடினார். அதன் பின் ஏற்பட்ட நெரிசலில் 800 பேர் இறந்தனர். ஆனால், நேருவின் நிகழ்ச்சிக்கும் சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்று விசாரணை கமிட்டி தெரிவித்தது. அன்று நடந்து போல எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளோம் என உத்தரபிரதேசத்தில் மோடி கூறியிருந்தார். ஆனால், இப்படியொரு சம்பவம் நடந்தது. அவரை மிகவும் பாதித்துள்ளது.