அரைமணி நேரம் கவர்னரிடம் பேசியது என்ன? | Manipur | BJP rule | Thokchom Radheshyam Singh
அரைமணி நேரம் கவர்னரிடம் பேசியது என்ன? | Manipur | BJP rule | Thokchom Radheshyam Singh மணிப்பூரில் மெய்டி - கூகி பிரிவினரிடையே இட ஒதுக்கீடு தொடர்பாக மோதல் வெடித்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஓராண்டுக்கும் மேல் பதற்றம் நிலவி மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கையால் இயல்பு நிலை திரும்பியது. வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக முதல்வராக இருந்த பாஜ தலைவர் பைரேன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்து பிப்ரவரியில் அவர் ராஜினாமா செய்தார். மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 60 எம்எல்ஏக்கள் உள்ள மணிப்பூர் சட்டசபையில் பாஜ கூட்டணிக்கு, 44 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரசுக்கு வெறும் 5 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இந்த சூழலில் அம்மாநில கவர்னர் அஜய் குமார் பல்லாவை பாஜ மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான தோக்சோம் ராதேஷ்யாம் சிங் தலைமையிலான அக்கட்சி எம்எல்ஏக்கள் நேற்று சந்தித்தனர். அரை மணி நேரத்துக்கு மேல் நடந்த சந்திப்பில் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்து அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. கவர்னரை சந்தித்த பின் பாஜ தலைவர் தோக்சோம் ராதேஷ்யாம் சிங் கூறியதாவது: மணிப்பூரில் மக்கள் விருப்பத்தின்படி புதிய அரசை அமைக்க பாஜ கூட்டணியின் 44 எம்எல்ஏக்கள் தயாராக இருப்பதாக கவர்னர் அஜய் குமார் பல்லாவிடம் சொன்னோம். மக்களின் நலன் கருதி அவர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம். மீண்டும் ஆட்சி அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். புதிய அரசு அமைவதில் யாருக்கும் பிரச்னையும் இல்லை என்றார். மணிப்பூர் சட்டசபை தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டு உள்ள நிலையில், மீண்டும் ஆட்சி அமைக்க பாஜவுக்கு கவர்னர் அஜய் குமார் பல்லா அழைப்பு விடுப்பார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.