ராணுவம், எதிர்கட்சிகளின் கொந்தளிப்பை சரி கட்டுவாரா முகமது யூனுஸ்! Bangladesh Political Crisis
ராணுவம், எதிர்கட்சிகளின் கொந்தளிப்பை சரி கட்டுவாரா முகமது யூனுஸ்! Bangladesh Political Crisis | Muhammad Yunus | Waker-Uz-Zaman இடஒதுக்கீடு பிரச்னையை வலியுறுத்தி, வங்கதேசத்தில் கடந்தாண்டு மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தால், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்ந்தது. பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர் உஸ் ஜமான் இடைக்கால அரசுக்கு முழு ஆதரவு வழங்கினார். இருப்பினும், பொதுத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களாகியும், தேர்தல் குறித்து எந்த அறிவிப்பும் வராததை அடுத்து, வாக்கர் உஸ் ஜமான் வங்கதேசத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களும் தேர்தலை விரைந்து நடத்த வலியுறுத்தினர். இந்நிலையில் இந்தாண்டு டிசம்பர் துவங்கி, அடுத்தாண்டு ஜூன் மாதத்துக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என, முஹமது யூனுசின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. இருப்பினும் யூனுசின் இந்த முடிவுக்கு, ராணுவ தளபதி மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஓர் அரசு கவிழ்ந்து மூன்று மாதத்துக்குள் புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என, அரசியல் சாசன விதி உள்ள நிலையில், மிகவும் தாமதமாக தேர்தலை நடத்துவதா என, அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இடைக்கால அரசு பொறுப்பேற்கும் போது, இந்த ஆண்டு ஜனவரியில் பொது தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்ட நிலையில், அதை நடத்தாமல் யூனுஸ் காலம் தாழ்த்துவது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது. இடைக்கால அரசுக்கும், ராணுவத்துக்கும் தேர்தல் தொடர்பான விஷயத்தில் மோதல் எழுவதற்கு முக்கிய காரணமே தேர்தல் தொடர்பான சீர்திருத்தங்களே. தேர்தலுக்கு முன் இந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, இடைக்கால அரசு கூறிய நிலையில், அதற்கு இவ்வளவு கால அவகாசம் அவசியமா என, ராணுவம் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் நிர்வாகம் மட்டுமே கொள்கை முடிவுகளை எடுக்க சட்டப்பூர்வ அதிகாரம் கொண்டிருக்கும் பட்சத்தில், அந்த பணிக்கு இடைக்கால அரசு பொருத்தமாக இருக்காது என்றும் ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது. இதுபோன்ற அடுக்கடுக்கான நெருக்கடியால், தேர்தல் உடனடியாக நடத்தப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டிய கட்டாயத்துக்கு முஹமது யூனுஸ் தள்ளப்பட்டுள்ளார். இந்த பிரச்னையை தீர்ப்பது குறித்து, அமைச்சரவையில் உள்ள பிற ஆலோசகர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக வங்கதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.