திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்துக்கு எதிராக வழக்கு
திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்துக்கு எதிராக வழக்கு ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவினர் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிராக சிவகங்கையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், உறுப்பினர் சேர்க்கும் திமுகவினர் பொதுமக்களிடம் ஆதார் எண், வாக்காளர் அட்டை, வங்கி பாஸ்புக் நகல் உள்ளிட்டவை கேட்கின்றனர். அவற்றை தர மறுத்தால், அரசு வழங்கும் 1000 ரூபாய் உதவித்தொகை நிறுத்தப்படும் என மிரட்டுகின்றனர். அனைவரின் செல்போன் எண்களுக்கு ஓரணியில் தமிழ்நாடு பதிவு தகவல் மற்றும் ஓடிபி வருகிறது. அந்த ஓடிபியை தெரிவித்ததும் திமுகவில் உறுப்பினராக சேர்ந்ததாக தகவல் வருகிறது. கட்சியில் சேர்க்க ஆதார் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பது சட்டவிரோதம் என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் ஏற்கனவே சேகரித்த தகவல்களை அழிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. நீதிபதிகள் எஸ்எம் சுப்ரமணியம், AD மரியா கிளேட் அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் கூறும்போது, ஓடிபி விவரங்களை பகிர வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தி வரும் நிலையில் எதற்காக ஓடிபி விவரங்களை கேட்கிறார்கள்? என கேட்டனர். சேகரிக்கப்படும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படும் என்பதற்கான விவரங்கள் இல்லை. ஆதார் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கும் நிறுவனம் அவற்றை விற்றுவிட்டால் என்ன செய்வது? வாக்காளர்களின் தனிநபர் விவரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம் என்பதால், ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையின் போது ஓடிபி யை பெற இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். உறுப்பினர் சேர்க்கை நடத்தலாம்; ஆனால், ஓடிபி விவரங்களை கேட்க கூடாது என அறிவுறுத்தினர். இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தையும் சேர்த்த நீதிபதிகள், டிஜிட்டல் முறையில் தனி நபர் தகவல் பாதுகாக்கப்படுவது பற்றி மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.