பாமக ராமலிங்கம் வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி கைது! | NIA | NIA Investigation | PMK Ramalingam | Rama
கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக பிரமுகராக இருந்த ராமலிங்கம், இந்து மதத்தின் மீது பற்று கொண்டவர். திருபுவனம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நடந்த மதமாற்றத்தை தடுத்தவர். 2019ல் மர்ம நபர்களால் ராமலிங்கம் கொடூரமாக கொல்லப்பட்டார். இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தொடர் விசாரணையில் தேனி, திண்டுக்கல், கும்பகோணம், திருவிடைமருதுாரை சேர்ந்த 18 பேர் ராமலிங்கத்தை கொலை செய்தது தெரிந்தது. இதில் திருவிடைமருதுார், நடு முஸ்லிம் தெருவை சேர்ந்த ரஹ்மான் சாதிக் மற்றும் அவரின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். திருபுவனம் முகமது அலி ஜின்னா, கும்பகோணம் அப்துல் மஜீத், பாபநாசம் புர்ஹானுதீன், திருவிடைமருதுார் சாகுல் ஹமீது மற்றும் நபீல் ஹாசன் ஆகியோரை தேடப்படும் குற்றவாளிகளாக என்ஐஏ அதிகாரிகள் அறிவித்தனர். இவர்கள் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு தலா 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் முகமது அலி ஜின்னா கொடைக்கானல் பகுதியில் இருப்பதாக ரகசிய தகவல் வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஜின்னாவை சுற்றி வளைத்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். ஜின்னாவுக்கு கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் பண்ணை வீடு உள்ளது. அங்கு தன் கூட்டாளி சாகுல் ஹமீதுக்கு அடைக்கலம் கொடுத்து தானும் தங்கி உள்ளார். அவர் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகியாக இருந்துள்ளார். தேனியில் உள்ள அந்த அமைப்பின் அறிவகம் என்ற இடத்தில்தான் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அங்கிருந்துதான் கொலையாளிகள் திருபுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருவிடைமருதுார், திருபுவனம் பகுதிகளில், ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களை பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மூளைச்சலவை செய்து முஸ்லிம்களாக மதமாற்றம் செய்து வந்தனர். அதை கண்டித்த ராமலிங்கத்தை கொலை செய்ததாக முகமது அலி ஜின்னா வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் என்ஐஏ அதிகாரிகள் கூறியுள்ளனர்.