2029 தேர்தலில் அறிமுகம் செய்ய மத்திய அரசு தீவிரம்! One Nation One Election |Central Cabinet Approves
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்! லோக்சபா தேர்தல் முடிந்து பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்து, 100 நாட்கள் முடிந்துள்ளது. இந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாக, இந்த 100 நாட்களில் ஒவ்வொரு துறையும் ஆலோசனை நடத்தி தங்களுடைய பரிந்துரைகளை அளித்துள்ளன. அதன்படி ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறையை அமல்படுத்துவது தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, தன் பரிந்துரைகளை அளித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போதும், செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழா உரையின் போதும், மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வலியுறுத்தினார். 18,626 பக்கங்கள் கொண்ட ராம்நாத் கோவிந் குழுவின் அறிக்கையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சாத்தியம் என கூறப்பட்டுள்ளது. இதை அமல்படுத்துவதற்கும், இதற்காக அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கும் மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஆட்சி கவிழ்ந்தால் அல்லது தொங்கு சட்டசபை அமைந்தால், மீண்டும் தேர்தல் நடத்தலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடக்கவிருக்கும் குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.