இந்தியாவை சீண்ட முயன்றால் பாக்.கில் புகுந்து அடிப்போம்: ஜெய்சங்கர் Operation Sindhoor| MEA Jaishan
அரசு முறை பயணமாக ஐரோப்பா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி நாடுகளின் தலைவர்களை சந்தித்து, இந்தியாவுடனான வெளியுறவு கொள்கைகள் குறித்து முக்கிய பேச்சு நடத்த உள்ளார். இந்நிலையில், பஹல்காமில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதைத் தொடர்ந்து இந்தியாவின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை, உலக நாடுகளின் சமாதானம், அமெரிக்கா தலையீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, ஜெய்சங்கர் விளக்கினார். இது குறித்து அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நடந்த சண்டை குறித்து பரபரப்பு பேச்சுக்கள் இன்னும் அடங்கவில்லை. முதலில் இந்த சண்டை எதற்காக நடந்தது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலா துறை வளர்ச்சியை சீர்குலைக்கவும், அங்கு பொருளாதார முன்னேற்றத்தை தடை செய்யவும், பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தினர். இதன் மூலம் காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்து, பதற்றத்தை ஏற்படுத்தவும், பொருளாதார முடக்கத்தை உண்டாக்குவதுடன், மத ரீதியிலான மோதலை ஏற்படுத்தவும் முயற்சி நடந்துள்ளது. இதன் பின்புலத்தில் பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவ அதிகாரிகள் இருந்துள்ளனர். அந்நாட்டு ராணுவ தளபதியின் மதச்சார்பான பேச்சே அதற்கு உதாரணம். பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் தி ரெசிஸ்டென்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்பினர் தான் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பதை நாங்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம். பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் உள்ளன.